செல்பி பிரியர்களுக்கு ஆப்பு வைத்த உபி காவல்துறை
- IndiaGlitz, [Tuesday,June 20 2017]
கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் செல்பி எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி சில சமயம் ரிஸ்க்கான செல்பி எடுத்து பல உயிரை பலி கொடுத்ததும் உண்டு. ஓடும் ரயிலில், உயரமான கட்டிடங்களில் இருந்து செல்பி எடுத்து உயிரை மாய்த்து கொண்டவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே உத்தரபிரதேச மாநிலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி உத்தரவுகள் அரசால் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது செல்பி குறித்து அதிரடி உத்தரவு ஒன்றை உபி காவல்துறை பிறப்பித்துள்ளது.
இதன்படி பொது இடங்களில் ஆபத்தான நிலையிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையிலோ செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே டிராக், ரயில்வே ஸ்டேசன்கள், பெரிய கட்டிடங்கள் ஆகிய இடங்களில் செல்பி எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக உபி காவல்துறை அறிவித்துள்ளது. இதேபோன்ற உத்தரவு உபியில் மட்டுமின்றி நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.