பயன்படுத்திய ஆணுறையை பெண்களுக்கு அனுப்பும் சைக்கோ… வலைவீசித் தேடும் போலீஸ்

  • IndiaGlitz, [Friday,May 19 2023]

ஆஸ்திரேலியாவில் மர்மநபர் ஒருவர் பயன்படுத்திய ஆணுறைகளைத் தொடர்ந்து பெண்களுக்கு தபால் மூலம் அனுப்பி வருவதாகப் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விசாரணை மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்ததாகக் கூறப்படும் தகவல் மேலும் திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு நகரங்களில் வசித்து வரும் பெண்கள் சிலர், தங்களுக்கு தபாலில் பயன்படுத்திய ஆணுறைகள் அனுப்பப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதுவரை 65 பெண்களுக்கு இப்படி ஆணுறைகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஆணுறையுடன் சேர்த்து ஒரு கடிதம் இருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் மிரட்டும் தோரணையில் பாலுறவு தகவல்கள் இருந்ததாகவும் பயத்துடன் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் முதல் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மெல்போர்ன் நகரப்பகுதியில் உள்ள கில்பிரேடா எனும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பள்ளியில் இருந்து திடிய தகவலைக் கொண்டு மர்ம நபர் யாரோ இதுபோன்ற போன்ற தகாத செயலில் ஈடுபட்டு வருவதாகப் போலீசார் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் இது திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்துள்ள கில்பிரேடா பள்ளி நிர்வாகம் பள்ளித் தகவலுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனக் கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது.