நொய்யல் ஆற்றின் நுரைக்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம்: தமிழக அமைச்சர்

  • IndiaGlitz, [Sunday,September 24 2017]

தமிழக அமைச்சர்களின் ஒருசில செயல்பாடுகள் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருப்பதால் பொதுமக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க அமைச்சர் ஒருவர் தெர்மோகோல் போட்டு மூடும் முயற்சி சமூக வலைத்தளங்களால் கிண்டலுக்கு உள்ளானது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு காரணம் என்று கூறியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்ததை அடுத்து நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வழிந்தது. இதற்கு சாயக்கழிவுகளால் ஏற்பட்ட மாசுபாடே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய அமைச்சர் கருப்பண்ணன் நேரில் வந்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, குடிநீரில் சுமார் 500 என்கிற அளவில் உப்பு இருக்கலாம் என்றும், தற்போது ஆற்றில் 700 என்கிற அளவிலேயே உப்பு இருப்பதாகவும், 1200 என்கிற அளவில் இருந்த உப்பின் அளவு குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் நொய்யல் ஆற்றில் அதிகளவில் நுரை உள்ளதாகவும், இது சாயக் கழிவுகளால் ஏற்பட்டது என்ற புகார் எழுந்தது. ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கள் சோப்பு போட்டு குளிக்கும்போது வெளியேறும் கழிவுநீர் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளாலேயே நுரை ஏற்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.