குடுமிபிடி சண்டைக்கு நடுவே ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட மேயர் பதவி!!! திடுக்கிடும் தகவல்!!!
- IndiaGlitz, [Friday,November 06 2020]
உலக அளவில் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த வார இறுதியில் கூட அதன் முடிவு வெளியாகாது என ஊடகங்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்திற்கு புதிய மேயராக ஒரு நாய் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
வில்டர் பீஸ்ட் எனும் பெயர் கொண்ட ஒரு பிரெஞ்ச் புல்டாக் வகையினத்தைச் சார்ந்த ஒரு நாய், கென்டக்கி மாகாணத்தில் உள்ள ராபிட் ஹாஷ் எனும் நகரத்தின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் மட்டும் இப்படி நடக்கவில்லை. கடந்த 1990 முதல் அந்நகரத்து மக்கள் இப்படித்தான் நாய்களை மேயர்களாக்கி வருகிறார்கள் என்ற தகவலையும் ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன.
ஆற்றங்கரையை ஒட்டி அமைந்திருக்கும் ராபிட் ஹாஷ் எனும் நகரத்தில் ஒரு அதிகாரப்பூர்வமற்ற பழங்குடி இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பழங்குடி மக்கள்தான் இப்படி தங்களுக்குரிய மேயராக ஒரு நாய்க்குட்டியைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். மேலும் அந்நகரத்து தூதராக 12 வயதே ஆன பார்டர் எனும் நாய்க்குட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அந்த நகரத்தில் உள்ள 22,985 வாக்குகளில் 13,143 வாக்குகளை பெற்று வில்டர் பீஸ்ட் புதிய மேயராகப் பொறுப்பேற்று இருப்பதாக தேர்தல் குழு அறிவித்து இருக்கிறது. மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வில்டர் பீஸ்ட் தன்னுடைய பதவியை வைத்து அதிக ஸ்பான்சர்களை குவிக்கும் எனவும் அந்நகரத்து மக்கள் மகிழ்ச்சித் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் இந்தத் தகவலைப் பார்க்கும் பலரும் உண்மையிலேயே ஒரு நாய்க்குட்டியை எப்படி மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும் எனப் பலரும் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.