ஊரடங்கை தளர்த்த கோரும் அமெரிக்க மாகாணங்கள்!!! பதறும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!!!
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அதேபோல பலி எண்ணிக்கையும் 35 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க ஏப்ரல் 30 வரை ஊரடங்கில் இருங்கள் என அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். அந்நாட்டில் கொரோனா நிவாரண நிதியாக 2 ட்ரில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு நிவாரண நிதிகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்துமாறு போராட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. வட கல்ஃபோர்னியா, மிச்சிகள், ஓஹியோ, உட்டா, வெர்ஜினியா உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பலர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து வருவதாகவும் போராட்டங்களின்போது தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களுக்கு என்று தனியாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவும் தெரிவித்து இருக்கிறார் என்பதுதான் தற்போது குழப்பத்தை வரவழைத்துள்ளது. மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற பகுதிகளில் உரடங்கை தளர்த்தலாம் எனவும் ட்ரம்ப் அறிவுறுத்தியிருக்கிறார். ஊரடங்கை தளர்த்தினால் தற்போதுள்ள சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக கணக்கிடப்பட்டள்ளது. இந்நிலையில் ஊரடங்கைத் தளர்த்துவது பலனளிக்காது எனவும் பல தரப்புகளில் இருந்து கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.