அவரு ஒரு துரோகி... குற்றம் சாட்டும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியா!!!

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

 

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் ஜான் போல்டன். அவர் அதிபர் ட்ரம்பை பற்றி விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பல கருத்துகளை கூறி பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறார். அதிபர் பதவிக்கான போட்டி நிலவும் இத்தருணத்தில் அந்நாட்டு ஊடகங்களும் இந்த விஷயத்தில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஜான் போல்டன் “அது நடந்த அறை- ஒரு வெள்ளை மாளிகையின் நினைவுகள்” என்ற தலைப்பில் தனது அனுபவத்தை புத்தகமாக வெளியிட இருக்கிறார். வருகிற 23 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக புத்தகம் வெளிவர இருக்கிறது. இதுவரை புத்தகமே வெளிவராத நிலையில் அதில் உள்ள கருத்துகளால் தற்போது உலக அளவில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புத்தகத்தின் ஒரு பகுதியை வால்ட்ஸ்டீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிக்கைகள் வெளியிட்டு இருக்கின்றன. அந்த பகுதிகளில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பை பற்றி பரபரப்பான பல தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜான் போல்டன் “அதிபர் ட்ரம்ப் அதிபர் பதவி வகிப்பதற்கே பொருத்தமற்றவர். அந்த வேலையைச் செய்தவற்கு அவரிடம் துளியும் திறமை இல்லை. திறமையே இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருகிறார்” எனக் கொளுத்தி போட்டு இருக்கிறார்.

மேலும், அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்தபோது, தனக்கு ஒரு கடிதத்தை எழுதியதாகவும் அந்தக் கடிதத்தில் அதிபர் கிம் ஒரு கேவலமான மனிதர் எனக் குறிப்பிட்டு இருந்தாதாகவும் இன்னொரு குண்டை தூக்கிப் போடுகிறார். இப்படி எண்ணற்ற சர்ச்சைகள் அந்த புத்தகத்தில் இருக்கும் என தற்போது பலருக்கும் இந்தப் புத்தகத்தைப் பற்றி ஆர்வம் தொற்றிக் கொண்டு விட்டது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் மைக் பாம்பேயிடம் ஜான் போல்டன் வெளியிட்ட கருத்துகளைக் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். பதில் அளித்த மைக் பாம்பியா “அவர் எண்ணற்ற பொய்களை கூறுகிறார். சம்பந்தமே இல்லாத பொய்களை அறைகுறை உண்மைகளுடன் கலந்து கூறி வருகிறார். அவர் ஒரு துரோகி. துரோகியாக மாறி அமெரிக்க மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறார். மேலும் உலகத்தில் உள்ள மற்ற நண்பர்களுக்குத் தெரியும் அதிபர் ட்ரம்ப் உலக நன்மையை விரும்புபவர் எனவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். இந்தச் சம்பவங்களை பார்க்கும் போது அதிபர் தேர்தலில் ட்ரம்ப் கடுமையாக போராட வேண்டியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.