அமெரிக்காவையே பார்த்து- இந்தியாவிடம் போய் பாடம் படிங்க… வைரலாகும் டிவிட்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அந்த நாட்டு தேர்தல் விதிமுறைப்படி பெரும்பாலான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே தபால் ஓட்டுகளை செலுத்தி விட்டனர். கொரோனா அச்சுறத்தல் காரணமாக இந்த ஆண்டு தேர்தலில் மக்கள் தபால் ஓட்டுக்கே முன்னுரிமை கொடுத்தனர் என அமெரிக்க தேர்தல் குழு குறிப்பிட்டு இருக்கிறது. அதோடு 120 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அதிபர் தேர்தலில் 66.9% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தேர்தல் நடைபெற்று 3 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. காரணம் தபால் ஓட்டுகளில் கடுமையான முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது என குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அப்படி தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் குளறுபடிகள் நடந்திருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு போதுமான எழுத்து ஆதாரம் இல்லை எனக்கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால் அப்படி எல்லாம் என்னை ஏமாற்றிவிட முடியாது, நான் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறேன் என மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் டிரம்ப்.
இதனால் பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தபால் ஓட்டுகளை எண்ணி முடிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வார இறுதிக்குள் அதிபர் தேர்தலுக்கான முடிவுகளை தெரிந்து கொள்ள முடியாது என ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
உலகமே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகளை எதிர்ப்பார்த்துக் காத்து கொண்டிருக்கிறது. அப்படி உலகமே எதிர்ப்பாக்கும் ஒரு தேர்தல் இன்னும் தபால் முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கலாம் என டிரம்ப் குற்றம் சாட்டிவருகிறார். இந்நிலையில் வளர்ந்து விட்ட ஒரு நாட்டில் தேர்தல் முறை இப்படியா இருப்பது எனப் பல உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்து நகைக்கத் தொடங்கி விட்டன.
இந்நிலையில் அமெரிக்க ஊடகத்துறையைச் சார்ந்த லாரன்ஸ் செலின் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்தியாவிடம் கற்றுக் கொள்ளுங்கள் என அமெரிக்காவைப் பார்த்துக் கூறியிருக்கிறார். மேலும் அவர் 130 கோடி மக்கள் தொகை உள்ள அந்த நாட்டில் தொழில்நுட்பத்தைக் கொண்டு அவர்கள் மிகவும் மேம்பட்டத் தேர்தலை நடத்துகிறார்கள் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்த டிவிட் தற்போது இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலிலும் EVM தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே தேர்தல் நடத்தப்பட்டது. இந்த முறையில் பெரிய குளறுபடிகள் நடப்பதாகக் கூறப்பட்டாலும் இதுவரை யாரும் அந்தக் குற்றசாட்டை நிரூபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
To my friends in India - It seems the US cannot run a national election without massive voter fraud, whereas India does quite well. Perhaps it is time for the US to outsource its national elections to Indian experts. Please contact the US embassy in New Delhi to offer services.
— Lawrence Sellin (@LawrenceSellin) November 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments