திடீரென உக்ரைன் எல்லைப் பகுதிக்குச் சென்ற ஜோ பைடன்… என்ன காரணம்?

ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உக்ரைன் எல்லைப் பகுதிக்கு அருகே போலந்து நாட்டில் நிறுத்தப்பட்டு இருக்கும் அமெரிக்க இராணுவ முகாமிற்குச் சென்றிருந்தார். உக்ரைன்- ரஷ்யா போர் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அதிபர் ஜோ பைடனின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா ராணுவம் 4 வாரங்களைக் கடந்து மோசமான நிலையில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு வகைகளில் உலக நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் ரஷ்யா இதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து போரை நடத்தி வருகிறது.

முன்னதாக நேட்டா அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் நேட்டா அமைப்பிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்காத உக்ரைன் தனது முடிவில் இருந்து பின்வாங்கிய பிறகும் ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் போரை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மீதான போர் பதற்றம் உலகம் முழுக்கவே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் ட அவர் உக்ரைன் போர் விவகாரம் குறித்து நேட்டா அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக நேற்று போலந்து நாட்டின் எல்லைப் பகுதிக்குச் சென்ற அதிபர் ஜோ பைடன் அங்குள்ள அமெரிக்க இராணுவ பாதுகாப்பு முகாமிற்குச் சென்று பார்வையிட்டார். மேலும் தன் நாட்டு வீரர்களுடன் அவர் ஒன்றாக அமர்ந்து பீட்சா சாப்பிட்டு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்தார். உக்ரைன் போர் விவகாரம் ஒரு மாதம் ஆகியும் முடிவுக்கு வராத நிலையில் அதிபர் ஜோ பைடன் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணம் நல்ல பலனைத் தருமா? என உலக மக்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.