வடகொரியா அதிபருக்கு அறுவை சிகிச்சை: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்
- IndiaGlitz, [Tuesday,April 21 2020]
அமெரிக்காவுடன் அணு ஆயுத சோதனை விவகாரத்தில் அவ்வப்போது மோதி வரும் வடகொரியா அதிபருக்கு சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் உளவுத்துறையை கண்காணிக்கும் அமெரிக்காவின் உயரதிகாரி தகவல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே கொரோனா வைரஸால் பலியானவர்கள் குறித்த உண்மையான தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்தும் அந்நாட்டு அரசு எந்தவித தகவலையும் தெரிவிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கிம் ஜாங் உன்னின் தாத்தாவின் பிறந்த நாள் விழா நடந்ததாகவும் உடல்நிலை காரணமாக அந்த விழாவில் கின் ஜான் உன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது
வடகொரிய அதிபருக்கு புகைப்பிடித்தல் பழக்கம் இருப்பதாலும் உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங்உன் உடல் நலன் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல என வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது