நோ பெட்ரோல்… பீர் ஊற்றினால் போதும்… அசர வைக்கும் புதுக் கண்டுபிடிப்பு!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

உலகம் முழுக்கவே எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலையேற்றம் போன்ற சிக்கலை சந்தித்து வருகிறோம். இந்நிலையில் எரிபொருளுக்குப் பதிலாக ஆல்கஹால் வகையாகக் கருதப்படும் பீரால் இயங்கும் இருசக்கர மோட்டார் சைக்கிளை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.

விண்வெளி ஆய்வு மற்றும் சினிமா ஸ்டண்ட் போன்றவற்றில் கவனம் செலுத்திவரும் கை மைக்கேல்சன் என்பவர் எரிபொருளுக்குப் பதிலாக பீரை வைத்து இயங்கும் இருசக்கர மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார். இந்த வாகனத்தில் எரிபொருளுக்குப் பதிலாக வெறுமனே பீரை ஊற்றினால் போதும் மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் செல்லும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவின் ப்ரூமிஸ்டன் பகுதியில் வசித்துவரும் இவருடைய புதிய கண்டுபிடிப்பு இன்னும் சாலையில் இயக்கப் படாமலேயே பல அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி கருத்துக் கூறியுள்ள கை மைக்கேல்சன் எரிவாயுவின் விலை அதிகரித்துவிட்டது. நான் மது அருந்துவதில்லை. அதனால் மதுவை வைத்து இயங்கும் இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன். அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. சாதாரண பெட்ரோல் வாகனத்தில் இருப்பதைப் போன்றில்லாமல் இந்த வாகனத்தில் வெப்பமூட்டும் சுருள் (காயில்) வைக்கப்பட்டு இருக்கும். இந்த சுருளில் பீரானது 300 டிகிரி செல்சியிஸில் சூடாகி பின்பு நீராவியாக மாற்றப்படும். இந்த நீராவி வாகனத்தை முன்னேற வைக்கிறது என்று விளக்கமளித்து உள்ளார்.

ஏற்கனவே எரிபொருளுக்கு தண்ணீர், பசுமை கழிவு போன்றவ்றை வைத்து இயக்கும் வாகனங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புது முயற்சியாக பீர் வைத்து இயக்கப்படும் புது வாகனம் பற்றிய தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஆனாலும் கை மைக்கேல்சன் பீர் வாகனத்திற்கு முனபே ராக்கெட்டால் இயக்கப்படும் நவீன கழிப்பறை, ராக்கெட் காபி பாட் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.