H-1B விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா அரசு முடிவு!!!

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

 

அமெரிக்காவில் கொரோனா பரவல் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவினால் அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இத்தகைய நெருக்கடி நிலைமையை சமாளிக்க அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, அமெரிக்க ஜனாதிபதியின் குடியுரிமை அதிகாரிகள் அந்நாட்டின் குடியுரிமை மற்றும் விசா வழங்கல் போன்ற திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளர். அதன்படி, திருத்தப்பட்ட மாற்றங்கள் இந்த மாதத்தின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. அமெரிக்கா தற்போது தொழில் நுட்ப பொறியாளர்களுக்கான H-1B விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பொறியாளர்கள் புலம் பெயர்ந்து அந்நாட்டில் வேலைப்பார்த்து வருகின்றனர். இதில் சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

H-1B விசாக்களுக்கான தடை விதிப்பின் மூலம் தற்காலிகமாக மற்ற நாட்டு பொறியாளர்களுக்கு வேலை இல்லாமல் செய்து சொந்த நாட்டு மக்களுக்கு அந்த வேலை வாய்ப்பை உறுதி செய்யலாம் என அமெரிக்கா கருதுவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச நாயண நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும் Wall Street பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்காவின் முதல் காலாண்டு பருவத்தில் பொருளாதாரம் 4.1 விழுக்காட்டிற்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கும் நிலையில் அடுத்தக் காலாண்டில் இந்த விகிதம் 10 லிருந்து 20 விழுக்காடாக உயர்ந்து காணப்படும் எனவும் வெள்ளை மாளிகையின் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.

இந்நிலைமையைக் கருத்தில் கொண்டே அமெரிக்க அதிபர் கடந்த மாதத்தில் 60 நாட்களில் புதிய குடியேற்றங்களுக்கான தடை உத்தரவில் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், குடியேற்ற விசாக்களில் கடுமையான விதிகள் உருவாக்கப்பட்டு வருவதைப் போல உள்நாட்டிலும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த விதிமுறைகள் பல மாதங்களுக்கு அல்லது ஒரு சில ஆண்டுகளுக்குக் கூட நீடிக்கலாம் எனவும் Wall Street பத்திரிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.

மேலும், H-1B விசாக்கள் மட்டுமல்லாது, H-2B விசாக்களிலும் பல மாற்றங்கள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் கல்வி பயில்வதற்காக செல்லும் மாணவர்களுக்கு இந்த H-2B விசா கொடுக்கப் படுகிறது. அவர்களுடன் துணைக்குச் செல்லும் பெற்றோர்களும் இந்த விசாக்களைப் பயன்படுத்தி அமெரிக்காவில் இதுவரை தங்கி வருகின்றனர். இந்த விசாக்களுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் எதிர்ப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகள் அங்கே தங்கி வேலைவாய்ப்பை பெறுவதற்காக OPT நீடிப்புகளும் வழங்கப்படுகிறது. கடந்த 2019 ஆண்டில் மட்டும் 22,3000 மாணவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலைவாய்ப்பை பெறுவதற்கான தங்களது விசாக்களை நீடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகைய நீடிப்புகளையும் தடை செய்ய அமெரிக்க குடியுரிமை அலுவலகம் ஆலோசனை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.