மசோதா நிறைவேறினால் அமித்ஷாவுக்கு தடை - அமெரிக்க ஆணையம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
'குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றினால் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.கடந்த ஆட்சிக்காலத்திலே நிறைவேற்ற முடியாமல் கைவிடப்பட்ட மசோதாவை புதிதாகப் பதவியேற்ற பிறகு தற்போது மீண்டும் பா.ஜ.க அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் பல திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இதன்மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 31.12.2014-க்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியம், சமணம், பௌத்தம், பார்சி மற்றும் கிறிஸ்துவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் பல பிரிவுகளைத் தளர்த்தியுள்ளது. குடியுரிமை பெறுவதற்கான காலஅளவை 11 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லையென்றாலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதாவை நிறைவேற்றிவிடுவதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது.
இந்தநிலையில், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் அரசும் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளது.சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம், `குடியுரிமைச் சட்டத்திருத்தம் தவறான திசையை நோக்கிய ஆபத்தான போக்கு. இது இந்தியாவின் மதச்சார்பற்ற பன்முகத்தன்மைக்கும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது' எனக் கூறியுள்ளது.மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
arul sudha
Contact at support@indiaglitz.com
Comments