கலவரத்திற்கு மத்தியில் பாரிஸில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை… உருக்கமான பதிவு
- IndiaGlitz, [Wednesday,July 12 2023]
சரவணன் அருள் நடித்த ‘தி லெஜெண்ட்‘ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்துவரும் நடிகை ஊர்வசி ரவுடாலா தற்போது பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் நகரில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஊர்வசி ரவுடாலா சினிமாவைத் தவிர பேஷன் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இவருடைய ஆடைகள் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தன.
இந்நிலையில் அவர் தற்போது 2023 பாரிஸ் பேஷன் நிகழ்ச்சிகளுக்காக பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் அங்குள்ள நிலைமை குறித்து கவலை அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். முன்னதாக சரவணன் அருள் நடித்த ‘தி லெஜெண்ட்‘ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை ஊர்வசி ரவுடாலா. தொடர்ந்து மாடலிங் துறையில் கவனம் செலுத்திவரும் அவர் இந்த வாரத் துவக்கத்தில் நடந்த பாரிஸ் பேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்களும் அமைதியற்ற சூழலும் தன்னை கவலைப்படுத்தி வருவதாகக் கூறியுள்ள அவர் தனது பணியை சரியாகச் செய்து முடித்துவிட்டதற்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.
பாரிஸ் புறநகர் பகுதியில் கடந்த ஜுன் 28 ஆம் தேதி பேருந்து நிறுத்ததில் நின்றிருந்த அல்ஜீரியாவை சேர்ந்த 17 வயது இளைஞனை காவல் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றார். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் கறுப்பின மக்களுக்கு எதிராகவும் அரபு மக்களுக்கு எதிராகவும் அதிகாரம் தலைவிரித்து ஆடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பாரிஸ் நகரில் 17 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமையால் தற்போது ஆங்காங்கே கலவரங்களும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்திருக்கும் நிலையில் நடிகை ஊர்வசி ரவுடாலா தற்போது பாரிஸ் நகரில் இருக்கிறார். அதுகுறித்து பேசிய அவர், பாரிஸில் எல்லாம் சரியாகவும் மென்மையாகவும் இருக்கிறது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். முன்னதாக நான் நகரத்திற்கு வந்தபோது வந்த செய்தியால் நான் மிகவும் பயந்தேன். ஆனால் இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது பாகாப்பு குழு மீது அக்கறை கொண்ட அவர், என்னுடன் எனது குழு உள்ளது. மேலும் அவர்களின் பாதுகாப்பைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். உண்மையில் இந்தியாவில் உள்ள எங்கள் குடும்பங்களும் எங்கள் பாதுகாப்பைப் பற்றி கவலை படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் செய்திகளைப் பற்றி படிக்கிறார்கள். எனவே எங்களால் முடிந்தவரை நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதைத்தவிர இந்த அழகான நாட்டைப் பற்றிக் கொண்ட கொந்தளிப்பு மற்றும் வேற்றுமைகளைக் கண்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருககிறது. ஒற்றுமை மற்றும் புரிதல் உணர்வின் சக்தி முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானது.
வன்முறை அதிக வன்முறையை மட்டுமே வளர்க்கும் என்று நான் உணர்கிறேன். ஆனால் இரக்கமும் பச்சாதாபமும் காயங்களைக் குணப்படுத்தும் மற்றும் வேற்றுமைகளை குறைக்கும். ஒவ்வொருவருவம் மதிப்பு மிக்கதாக உணரும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
நான் தனிப்பட்ட முறையில் எப்போதும் பிரான்சின் வளமான கலாச்சாரம் வரலாறு மற்றும் ஆன்மாவைப் போற்றுகிறேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அமைதியின்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன. வலுவாக இருங்கள். ஒற்றுமையாக இருங்கள், ஒன்றாக சேர்ந்து இந்த துன்பத்திலிருந்து மேலே வருவோம் என்று நடிகை ஊர்வசி ரவுடாலா விடுத்திருக்கும் பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இரக்கமும் பச்சாதாபமும் காயங்களைக் குணப்படுத்தும் என்று சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு கூறியிருக்கும் கருத்துகளுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.