ஆடுகள் தான் பலியிடப்படும், சிங்கங்கள் அல்ல: நீட் குறித்து 'உறியடி' இயக்குனர் விஜய்குமார்
- IndiaGlitz, [Wednesday,September 06 2017]
அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் 'உறியடி' இயக்குனர் விஜய்குமார் பேசியதாவது:
அனிதாவை கொன்றது யார்? எத்தனை கைகளில் அந்த ரத்தம் படிந்துள்ளது. கிளாடியேட்டர் படத்தில் ஆட்சி செய்யும் தகுதியுள்ள ஒரு அரசனை சிறையில் அடைத்து சாப்பாடு போடாமல் விஷ ஊசி போட்டு அதன் பின்னர் அவரை சண்டைக்கு அனுப்புவார்கள். அதுபோல் மாநில பாட திட்டத்தில் படித்து அனைத்து தகுதியும் பெற்ற ஒரு மாணவியை திடீரென நீட் எழுத சொல்வது எந்த விதத்தில் நியாயம்
ஒரு பெண் ஒரு குறிக்கோளுடன் 12 வருடங்கள் உருண்டு புரண்டு படித்தார். கழிவறை கூட இல்லாத சூழ்நிலையில் கஷ்டப்பட்டு படித்து தனது குடும்பத்தை கரையேற்ற 1176 மதிப்பெண்கள் பெற்றார். இதற்கு மேல் ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும். அந்த பெண்ணிடம் நீட் உண்டு, நீட் இல்லை, இப்போ வந்துவிடும், அப்போ வந்துவிடும் என்று கூறி, ஏமாற்றி மெண்டல் டார்ச்சர் செய்தது யார்? அந்த பெண் சாகவில்லை அனைவரும் சேர்ந்து சாகடித்துவிட்டார்கள்
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதியார் கூறினார். உணவு மட்டும்தானா? அதில் கல்வியையும் சேர்க்க வேண்டாமா? ஒரு இந்திய குடிமகனுக்கு தரமான வாழ்வை அளிக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதில் கல்வியையும் சேர்க்க வேண்டாமா?
அரசு பள்ளியில் மட்டுமே படித்த ஒரு மாணவர் எப்படி நீட் தேர்வை எழுத முடியும். அப்படியானால் தனியார் கோச்சிங் செண்டர் மற்றும் தனியார் பள்ளிகள் சம்பாதிக்கவே இந்த திட்டமா?
எனவே நாம் எல்லோரும் நீட்டை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் சட்டங்கள் திருத்தப்படும் என்பது ஜல்லிக்கட்டு விஷயத்தில் உண்மையாகியது. நம்மால் முடிந்த இடங்களில் குரல் கொடுத்தால் நிச்சயம் மாற்றம் ஏற்படும்
'இங்கே பறிப்பவர்களின் உரிமைகளை பிச்சையெடுத்து வாங்க முடியாது. தீர்மானங்களாலும், மன்றாடுவதின் மூலமும் நியாயங்கள் பிறக்காது. கோவிலின் முன்பு பலியிடப்படுவது ஆடுகள் மட்டுமே, சிங்கங்கள் அல்ல
இவ்வாறு உறியடி இயக்குனர் விஜயகுமார் பேசினார்.