Uriyadi 2 Review
உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு இளைஞனின் அடி
உறியடி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்ற இயக்குனர், நடிகர் விஜயகுமார், சூர்யாவின் பேனரில் 'உறியடி 2' படத்தை இயக்கி நடித்துள்ளார். நல்ல புரமோஷன், டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு, சூர்யாவின் பேனர் ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. எதிர்பார்ப்பை நிறைவு செய்தார்களா உறியடி 2? படக்குழு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் லண்டனில் மருந்து தொழிற்சாலை அமைக்க முயற்சிக்கின்றார். அந்த மருந்து தொழிற்சாலையால் சுற்றுச்சுழலுக்கு ஆபத்து என்று இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தடை விதித்தன. ஆனால் இந்திய அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்று தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த தொழிற்சாலையை அமைக்க அனுமதி தருகின்றனர். அந்த தொழிற்சாலையில் போதிய வருமானம் இல்லாததால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடுகின்றனர். போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் அந்த தொழிற்சாலை அபாயகரமாக உள்ளது. இந்த நிலையில் விஜயகுமாரும் அவருடைய நண்பர்கள் இருவரும் அந்த தொழிற்சாலையில் வேலையில் சேருகின்றனர். அப்போது நடக்கும் விபத்து ஒன்றில் விஜயகுமாரின் நண்பர் இறந்துவிட, அந்த தொழிற்சாலையை இழுத்து மூட விஜயகுமார் முயற்சிக்கின்றார். இந்த நிலையில் அந்த தொழிற்சாலையால் ஒரு பெரிய விபரீதம் ஏற்படுகிறது. அந்த விபரீதம் என்ன? அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன? அந்த தொழிற்சாலைக்கு எதிராக விஜயகுமாரும், அந்த ஊரில் உள்ளவர்களும் என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதுதான் மீதிக்கதை.
எஞ்னிரியரிங் படித்துவிட்டு வேலையில்லாத பட்டதாரியாக அறிமுகமாகும் விஜயகுமார் ஆரம்ப காட்சிகளில் நண்பர்களுடன் அரட்டை, விஷ்மியாவுடன் காதல் என ஒரு சராசரி ஹீரோ செய்யும் வேலையை செய்கிறார். நண்பன் இறந்தவுடன் சீரியஸாக மாறிவிடுகிறார். இரண்டாம் பாதி முழுவதும் அவர் ஒரு அமைதியான அதே நேரத்தில் ஒரு அழுத்தமான நடிப்பை தந்துள்ளார். போலீஸிடம் 'உனக்கு என்னடா வேணும்' என்று தில்லாக பேசும் வசனத்தின்போது தியேட்டரில் கைதட்டல் பெறுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ஆக்ரோஷமான இளைஞனின் மனதை பிரதிபலிக்கின்றார்.
விஷ்மிகா படத்தின் நாயகியாக ஹீரோவுடன் டூயட் மட்டும் பாடாமல் கொஞ்சம் கதையிலும் சம்பந்தப்பட்டுள்ளார். ஒரு டாக்டராக, அந்த தொழிற்சாலையில் விபரீதம் நடக்கும்போது பதபதக்கின்றார். ரொமான்ஸ் காட்சியிலும் நடிப்பு ஓகே.
விஜயகுமாரின் நண்பர்கள் இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தொழிற்சாலை முதலாளி மற்றும் ஜாதிக்கட்சி அரசியல்வாதி, ஆளுங்கட்சி எம்பி ஆகியோர்கள் கேரக்டரில் திரையில் பார்த்ததும் பார்வையாளர்களுக்கு யாருடைய ஞாபகம் வரும் என்பதை சொல்லவே தேவையில்லை.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக இடைவேளை முந்தைய ஐந்து நிமிடங்கள் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது. பொதுவாக பல படங்களில் இடைவேளை காட்சியில் ஹீரோ பஞ்ச் வசனம் பேசுவார், அல்லது ஒரு திருப்பமான காட்சி இருக்கும். ஆனால் இந்த படத்தில் இடைவேளை காட்சியை முழுக்க முழுக்க இயக்குனர், இசையமைப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். அவரும் ஏமாற்றவில்லை.
பிரவீண்குமாரின் ஒளிப்பதிவில் போராட்ட காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள், மருத்துவமனை காட்சிகள் கவனத்தை பெறுகிறது. படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் இருக்கும்படி எடிட் செய்த லினுவுக்கு பாராட்டுக்கள்.
இயக்குனர் விஜய்குமார் முதல் பாகம் போல் இன்றி இந்த படத்தில் ஒரு சீரியஸான விஷயத்தை சொல்ல வந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை நாம் பார்த்துள்ளதால் அந்த போராட்டத்தின் பாதிப்பு படத்தில் தெரிகிறது. இடைவேளை வரை கதையின் சீரியஸ் தன்மையை ஆங்காங்கே மட்டும் காண்பித்துவிட்டு இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க கதைக்குள் நுழைகிறார். ஜாதியை அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக பயன்படுத்துவது, மனிதத்தன்மையே இல்லாத முதலாளிகள், அவர்களுக்கு எடுபிடியாக இருக்கும் அரசியல்வாதிகள், ஆகியவைகளை தோலுரித்துள்ளார். ஜாதிக்கட்சி தலைவரை எதிர்த்து இருநூறுக்கும் அதிகமானோர் போட்டியிட அதில் ஒரு திடீர் திருப்பத்தை இயக்குனர் விஜய்குமார் தந்துள்ளதை பாராட்டலாம். தேர்தல் நேரத்தில் மக்கள் சிந்திக்கும் வகையில் ஆங்காங்கே வசனங்கள் தெறிக்கிறது. எம்.ஐ.சி கேஸ் உள்பட ஒருசில வேதியியல் விஷயங்கள் குறித்து இயக்குனர் நிறைய ஹோம் ஓர்க் செய்துள்ளார் என்பது பல காட்சிகளில் தெரிகிறது.
இந்த படத்தின் மைனஸ் என்று பார்த்தால் இவ்வளவு சீரியஸான ஒரு கதையில் முதல் அரை மணி நேரம் ரொமான்ஸ், நட்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் போராட்டக்காட்சிகளில் இன்னும் புத்திசாலித்தனம் இருந்திருக்கலாம். ஒரு சர்வதேச தொழிலதிபர், ஜாதிக்கட்சி அரசியல்வாதி, ஆளுங்கட்சி எம்பி ஆகியோர்களை ஒரு கிராமத்து இளைஞர் மிக எளிதில் வீழ்த்துவது நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது.
இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் தமிழக மக்கள் சந்தித்து வரும் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்சனைகள், அரசியல்வாதிகளின் நயவஞ்சகத்தனங்கள் ஆகிவற்றை சரியாக கையாண்டு தேர்தல் நேரத்தில் மக்களை சிந்திக்க வைத்த இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும்.
மொத்தத்தில் 'உறியடி 2' உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு இளைஞனின் குரல் என்பதால் அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம்.
- Read in English