தனியாருக்கு விற்கப்படும் LIC,IDBI பங்குகள்.. குறையும் தனிநபர் வருமான வரி..! மத்திய பட்ஜெட் 2020.
- IndiaGlitz, [Saturday,February 01 2020]
நாடாளுமன்றத்தில் இன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள பட்ஜெட் நகல்கள் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் எடுத்து வரப்பட்டது.
தனிநபர் வருமானத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரியில் மாற்றமில்லை. ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் இனி 20% வருமான வரி கட்டத்தேவையில்லை. 10% கட்டினால் போதுமானது.
அதே போல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20% வருமான வரி கட்டத் தேவையில்லை. 15% கட்டினால் போதுமானது. 10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 30% வரி கட்ட தேவையில்லை. இனி 20% வரி கட்டினால் போதுமானது.
அதே போல 12.5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 30% வரி கட்டாமல், 25% வரி கட்டினால் போதும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30% வருமான வரி என்பதில் மாற்றம் இல்லை.
2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நாடளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அறிவித்து வரும் நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தைகள் வேகமாகச் சரிந்து வருகின்றன. மதியம் 1:32 மணி அளவில் சென்செக்ஸ் 547 புள்ளிகள் சரிந்து, 40,192 என்கிற நிலையிலும், நிஃப்டி 164 புள்ளிகள் குறைந்து 11,776 என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.
எல்.ஐ.சி நிறுவனத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான பங்குகளில் ஒருபகுதி புதிய பங்கு வெளியீட்டின் மூலம் பங்குச்சந்தையில் விற்கப்படும். அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகளும் விற்கப்படும். 2020-21-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும். நாட்டின் மூலதன செலவினங்கள் அதிகரிக்கப்படும். அரசின் செலவு 30.42 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான சலுகைகள், புதிய கல்வி கல்வி கொள்கையை செயல்படுத்துவது, கிராமங்களுக்கான தன்யலட்சுமி திட்டம், சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட 69,000 கோடி, தனியாருடன் இணைந்து மருத்துவ கல்லூரிகள் போன்றவையும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.