கொரோனா அவசர எண்ணை அழைத்து சமோசா கேட்ட வாலிபரை 'கவனித்த' கலெக்டர்
- IndiaGlitz, [Tuesday,March 31 2020]
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நகரங்களில் 24 மணிநேர அவசர உதவிக்கான இலவச உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பலர் கொரோனா குறித்த சந்தேகங்களை கேட்டு உதவி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அவசர எண்ணை தவறாக பயன்படுத்திய வாலிபர் ஒருவருக்கு நூதன தண்டனையை கலெக்டர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் செயல்பட்டுவரும் அவசர உதவி எண்ணை இளைஞர் ஒருவர் அடிக்கடி தொடர் கொண்டு 4 சமோசாக்களை தனது வீட்டுக்கு அனுப்பும்படி கூறியுள்ளார். முதலில் அவரை போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
ஆனாலும் அந்த நபர் மீண்டும் மீண்டும் 4 சமோசாக்களை தனது வீட்டுக்கு அனுப்பும்படி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ராம்பூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக அந்த நபரின் வீட்டுக்கு 4 சமோசாக்களை அனுப்ப உத்தரவிட்டது மட்டுமின்றி பொதுசேவையை தவறாக பயன்படுத்தியதாக அவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நூதன தண்டனையை அளித்துள்ளார். 4 சமோசாவுக்கு ஆசைப்பட்டு கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த அந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.