உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் தெலுங்கானா போலீசாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மாயாவதி.
- IndiaGlitz, [Friday,December 06 2019]
ஹைதராபாத்தில் ஒரு வாரம் முன்பு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விசாரணையின் போது தப்பி ஓட முயற்சி செய்ததால் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த என்கவுன்ட்டர் குறித்து பொதுமக்களும் அரசியல் தலைவர்கள் பலரும் தெலுங்கானா காவல் துறையையும் சைபராபாத் காவல்துறை கமிஷனர் சஜ்ஜனாரையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரபிரதேசம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியிடம் இந்த என்கவுன்டர் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து பேசிய அவர், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் தெலுங்கானா போலீசாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உ.பி-யில் தலைவிரித்து ஆடுகின்றன. ஆனால் ஆளும் கட்சியானது சட்டம் ஒழுங்கைப் பற்றி கவலைப்படாமல் தூங்கிக் கொண்டு இருக்கிறது என்றார்.
கடந்த 90 நாட்களில் மட்டும் உத்திர பிரதேசத்தில் 129 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நேற்று கூட சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கும் மற்றறொரு பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண்ணை தீயிட்டு கொளுத்திய கொடூர சம்பவமும் உ.பி-யில் நடந்தேறின. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அங்கு தலைவிரித்தாடும் நிலையில், மாயாவதியின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.