கோவிலில் பிச்சை எடுத்த சிறுவன் திடீரென கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.. எப்படி தெரியுமா?
- IndiaGlitz, [Monday,December 19 2022]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் வறுமை காரணமாக கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு கோடிக்கணக்கான சொத்து இருப்பதாக தெரிய வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரூர்க்கி என்ற பகுதியில் 10 வயது சிறுவன் ஷாஜேப் ஆலம் என்பவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய தந்தை கடந்த 2019ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து அவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் அந்த சிறுவன் வாடிக் கொண்டிருந்த நிலையில் தாயாரும் காலமானார். இதனையடுத்து ஷாஜேப் ஆலம் சொந்த ஊரை விட்டு அருகிலுள்ள வேறொரு பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக தெரிகிறது. அங்கிருந்த கோயில் ஒன்றில் ஷாஜேப் ஆலம் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் 10 வயது சிறுவனின் தாத்தாவுக்கு கோடிக்கணக்கான சொத்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஒரு விலை மதிப்புள்ள வீடு மற்றும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை ஷாஜேப் ஆலம் என்ற சிறுவனின் தாத்தா தனது பேரனுக்கு உயில் வைத்து விட்டு சென்றதாக தெரியவந்தது.
இதனையடுத்து ஷாஜேப் ஆலம் உறவினர்கள் அவரை தேட தொடங்கிய நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி என்ற பகுதியில் ஷாஜேப் ஆலம் வசித்து கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ஷாஜேப் ஆலம் என்ற சிறுவனை வீட்டிற்கு அழைத்து வந்த அவரது தாய் மாமா அவருடைய சொத்தை அவருக்கு கொடுத்ததை அடுத்து தற்போது அந்த 10 வயது சிறுவன் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தனது தாத்தாவுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருந்தது என்பதும் அவரது சொத்து தனது பெயருக்கு உயிர் வைக்கப்பட்டது என்பதையும் தெரியாமல் இத்தனை நாளாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அந்த சிறுவன் தற்போது ஒரே நாளில் திடீரென கோடீஸ்வரராகி இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.