இந்தியா முழுவதும் பட்டணி கொடுமையால் வீதிக்கு வரும் அமைப்புச்சாரா கூலித் தொழிலாளர்கள்!!!
- IndiaGlitz, [Wednesday,April 15 2020]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி இரவு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் நேற்றுடன் 21 நாள் ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பும் என எதிர்ப்பாத்த அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் வேலைப்பார்த்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் வழக்கம்போல் ரயில்போக்குவரத்து தொடரும் என எதிர்ப்பார்த்த தொழிலாளர்கள் அங்கு பெரும் எண்ணிக்கையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் எண்ணத்தில் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஒன்று கூடினர். அக்கூட்டத்தில் எவரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை. பெரும்பாலான முகங்களில் முகக்கவசங்கள் இல்லை. நோய்த்தொற்று பரவும் அபாயம் பற்றி எவரும் கவலைப்படவில்லை. இந்நிலைமையை பார்த்த காவல்துறை கடும் அச்சத்தில் உறைந்தது. முதலில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் காவல்துறை நடவடிக்கையை மேற்கொண்டது.
இத்தகைய பரபரப்பு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தவை நீடித்து உத்தரவிட்டார். இதனால் மேலும் குழப்ப நிலைமைக்கு ஆளாகிய தொழிலாளர்கள் “ஊரடங்கு வேண்டாம், உணவளியுங்கள் அல்லது ஊருக்கு அனுப்புங்கள்” என்று முழக்கமிட்டவாறு ஒன்றுகூட ஆரம்பித்தனர். இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்புள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்துவருகிறது. இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் ஒன்றுகூடி “ஊரடங்கை தளர்த்துங்கள் அல்லது உணவளியுங்கள் என்று கோசமிட்டது” பற்றி கடும் விவாதம் ஏற்பட்டது. இந்நடத்தை அம்மாநில அரசின் தோல்வியைக் காட்டுவதாகவே பலரும் விமர்சனம் வைத்தனர்.
நேற்றைய போராட்டத்தில் காவல் துறையின் கடும் எதிர்ப்புக்கிடையிலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் “ஊரடங்கு வேண்டாம், ஊருக்குப்போகிறோம் … ரேஷன் வேண்டும் ரேஷன் வேண்டும்” என்ற கோசங்களை எழுப்பினர். அவர்களிடம் கொரோனா பற்றிய அச்சத்தை விட பசியால் வாடிய முகங்களையே பார்க்க முடிந்ததாக செய்திகள் வெளியாகின. கடந்த 3 வாரங்களுக்கு மேலாக வேலை எவுதும் கிடைக்காத தொழிலாளர்கள் “வெறுமனே 2 வேளை உணவை உட்கொள்வதற்கே படாத பாடு படவேண்டியிருக்கிறது. இந்நிலைமை நீடிக்குமானால் பட்டிணியால் சாவதைத் தவிர வேறுவழியில்லை” என வருத்தம் தெரிவித்தனர். இந்தத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் துறை அவர்களை கலைக்க முடியாமல் கண்ணீர் புகை, தடியடிகளை நடத்தி அவர்களை கலைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று சூரத்திலும் 500க்கும் மேற்பட்ட அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்து வீதிகளில் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு, ஒரிசா, உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் சூரத்தில் வேலைப்பார்த்து வருகின்றனர். தற்போது அவர்களும் தங்களுக்கு உணவுகிடைக்கவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஊரடங்கை அமல்படுத்திய மத்திய அரசு அமைப்புச்சாரா கூலித் தொழிலாளிகள் மற்றும் வெளிமாநிலத்தில் வாழ்க்கை நடத்திவரும் தொழிலாளர்களுக்கு எந்த வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வில்லை எனப் பலத்தரப்புகளில் இருந்தும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பல இந்தியர்களை மீட்டுவந்தது மாதிரி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்களது பசியைப் போக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலத் தரப்புகளில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
முதல் ஊரடங்கை அமல் படுத்தியபோது டெல்லி, கர்நாடகா, மும்பை போன்ற நகரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பி பரபரப்பை ஏற்படுத்தினர். தற்போது இரண்டாம் ஊரடங்கு உத்தரவின்போதும் அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் தங்களுக்கு உணவில்லை எனக் குற்றம்சாட்டி வீதிக்கு வரும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. டெல்லி, சூரத் ஐ தொடர்ந்து பல மாநிலங்களிலும் இந்நிலைமை நீடித்தால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து விடும் அபயாம் இருப்பதாகவும் பல சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விஷயத்தில் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் வெறுமனே நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.