தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: என்ன செய்ய போகிறது உபி அரசு?
- IndiaGlitz, [Saturday,December 07 2019]
உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபர் சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஜாமினில் வெளிவந்த இவரும் அவருடைய கூட்டாளிகளும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்த உன்னாவ் இளம்பெண் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தியுள்ளனர். பொது இடத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலியல் பலாத்காரம் என்ற குற்றத்தை செய்து ஜாமீனில் வெளிவந்த ஒருவர் அதே இளம்பெண்ணை தீவைத்து கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று இரவு பரிதாபமாக பலியானார். உன்னாவ் இளம்பெண்ணின் மரணத்திற்கு உபி அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்று பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஐதராபாத் என்கவுண்டருக்கு தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் தேசிய மனித உரிமை ஆணையம், உன்னாவ் இளம்பெண் படுகொலை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வியும், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினாலும் உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் மகளிர் அமைப்புகள் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.