ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற பதவிக்கான தேர்தல்: மெகா வெற்றிப்பெற்ற இந்தியா!!!

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

 

ஐக்கிய நாடுகளின் சபையின் வலிமை மிக்க பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் இந்தியா அபாரமான ஓட்டுகளைப் பெற்று பதவியைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. அதனால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் வலிமை மேலோங்கி இருப்பதாகவும் கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

ஐ.நாவின் உறுப்பு நாடுகளாக மொத்தமுள்ள 194 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஓட்டுகளைப் பெற்றால் மட்டுமே இந்தியா நிரந்தரமற்ற பாதுகாப்பு கவுன்சிலில் பதவி வகிக்க முடியும். நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா 184 வாக்குகளை பெற்று முன்னணி வகித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐ.நாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உட்பட மேலும் 10 நாடுகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அதில் 5 இடங்களுக்கு நடந்த தேர்தலில் இந்தியாவோடு சேர்ந்து அயர்லார்ந்து, மெக்சிகோ, நார்வோ போன்ற நாடுகளும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தலில் கனடா தோல்வியை தழுவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நடைபெறும். அப்படி தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பு நாடுகள் 2 ஆண்டுகள் வரைக்கும் பதவியில் நீடிக்க முடியும். பின்பு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் தற்போது ஜெர்மனி, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் இந்தியா உட்பட 5 நாடுகள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளன. தேர்ந்தெடுக்கப் பட்ட நாடுகள் 2021 முதல் 2022 வரை பதவி வகிக்கப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று ஆப்பிரிக்கா – ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான 2 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருந்தன. இந்த 2 இடங்களுக்காக நடந்த தேர்தலில் டிஜிபோட்டி, இந்தியா, கென்யா ஆகிய 3 நாடுகளும் போட்டியிட்டன. ஆசிய பசிபிக் பிரிவில் நடந்த தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளைப் பெற்று இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 55 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் இந்தியாவிற்கு அமோக ஆதரவு கிடைத்து இருக்கிறது என்பதும் வரவேற்கத் தக்கதாகப் பார்க்கப் படுகிறது.

மேலும் பாதுகாப்பு கவுன்சிலில் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கு ஒரு உறுப்பினர் மட்டும் காலியாக இருந்தது. மேற்கு ஐரோப்பாவிற்கு 2 காலியிடங்கள் இருந்தன. இதற்காக கனடா, அயர்லாந்து, நார்வே நாடுகள் போட்டியிட்டன. இந்தப் போட்டியில் கனடா தோல்வியைத் தழுவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியா பல முறை ஐநா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறது. கடந்த 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 ஆண்டுகளில் இந்தியா வென்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 2011-2012 ஆம் ஆண்டுகளில் கூட இந்திய இந்தப் பதவியை வகித்தது. தற்போது ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு பின்பு பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏகபோக வெற்றியைப் பெற்றிருப்பதால் வலிமை மிகுந்த நாடாக இந்தியா உலக அளவில் உணரப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர, எஸ்தோனியா, செயின்ட் வின்சென்ட், கிரிநாடைன்ஸ், துனிசியா, வியட்நாம். பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இந்த ஆண்டு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இடம் பெற்றுள்ளன.