இந்த அரசியல் நாகரீகம் தமிழகத்திற்கு எப்போது வரும்?

தமிழகத்தில் திராவிட அரசியல் கட்சிகள் காலூன்றிய பின்னர் எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகள் போல் பார்ப்பதும், ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் பொதுமேடையில் சந்தித்தால் கூட கண்டுகொள்ளாமல் இருப்பதும் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிதரூர், கோவில் ஒன்றில் நடந்த துலாபார நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எதிர்பாராத வகையில் துலாபார தராசு அவருடைய தலையில் விழுந்ததால் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிதரூரை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பரபரப்பான தேர்தல் பணியிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் காயம் அடைந்ததை அறிந்து நேரில் சென்று பார்த்த நிர்மலா சீதாராமனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சசிதரூர் தனது சமூக வலைத்தளத்தில், 'தேர்தல் பிசியிலும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது என்னை நெகிழ செய்துவிட்டது. நிர்மலா சீதாராமன் ஒரு நல்ல அரசியல்வாதி' என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர்களை எதிரியாக நினைக்காத இந்த நாகரீக அரசியல் தமிழகத்திலும் நிகழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை! அது நடக்குமா?