ஆளும் பாஜகவின் 9 ஆவது மத்திய பட்ஜெட்! நிலவரம் என்ன?
- IndiaGlitz, [Monday,February 01 2021]
நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்காக மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் காகிதமில்லா மின்னணு பதிவாக தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கொரோனா பரவலுக்கு பிறகு அறிவிக்கப்பட்டு இருக்கும் நிதிநிலை அறிக்கை இது என்பதால் மக்கள் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் இந்த பட்ஜெட்டை கவனித்து வருகின்றனர்.
இந்த டிஜிட்டல் முறையிலான பட்ஜெட்டை உடனுக்கு உடனே தெரிந்து கொள்ள புதிய செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. “Union Budget Mobile App” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த செயலி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்து இருக்கும். மேலும் இதில் பட்ஜெட் குறித்த அனைத்துத் தகவல்களையும் எளிதாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ios சாதனங்களில் இச்செயலி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.