உங்கள் தொகுதியில் முதலமைச்சராக ஷில்பா பிரபாகர் நியமனம்!
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது அனைத்து மாவட்டங்களிலும் குறைத்தீர்ப்பு கூட்டத்தை நடத்தி அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மனுக்களை பெற்று இருந்தார். இந்த மனுக்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு 100 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” எனும் புதிய துறைக்கான அரசாணையில் கையெழுத்து இட்டார். மேலும் இதன் சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப் பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” எனும் புதுத்துறை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதன் சிறப்பு அலுவலராக பொறுப்பேற்று இருக்கும் ஷில்பா பிரபாகர் சதீஷ் சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அடுத்து திருச்சி மாவட்டத்தில் துணை ஆட்சியர், வேலூர் மாவட்டத்தில் சார் ஆட்சியர், சென்னை மாநகராட்சியில் துணை ஆணையர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராகவும் பணியாற்றினார். அதோடு தனது ஒரே மகளை அரசு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்து அரசு பணியாளர்கள் மத்தியில் பெரிதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.