கொரோனா தவிர 2020 இல் 10 மறக்க முடியாத நிகழ்வுகள்… வைரல் வீடியோ!!!
- IndiaGlitz, [Wednesday,December 30 2020]
2020 முழுக்க கொரோனா வைரஸே ஆக்கிரமித்து விட்டது. இதனால் இந்த வருடத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளும் ஏன் சந்தோஷமான சில விஷயங்கள் கூட பொதுவெளிக்கு வராமலே போய்விட்டது. இப்படி இருக்கும்போது 2020 வருடத்தில் மனிதர்களை பாதித்த சில விஷயங்களையும் அதன் தாக்கத்தையும் இந்த வீடியோ தொகுத்து இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து புதிய தொற்று பரவத் தொடங்கியது. அடுத்து இது கொரோனா வகை வைரஸ் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். சீனாவில் இருந்து காட்டுத்தீ போல பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இன்று மூலை முடுக்குகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் பொருளாதார வீழ்ச்சி, உயிரிழப்பு, வறுமை எனப் பல்வேறு நெருக்கடிக்குள் மனிதர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதே நேரத்தில்தான் மனிதநேயமும் பாராட்டைப் பெற்றது. கொரோனாவை எதிர்க்கொள்ள வேண்டி பல உலகப் பணக்காரர்கள் தங்களது காசை அள்ளிக் கொடுத்தனர். பில்கேட்ஜ், அமேசான், ஃபேஸ்புக் நிறுவனம் என அனைத்து பெரும் முதலாளிகளும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். அதேபோல இந்தியாவிலும் பாலிவுட் தொடங்கி நம்ம ஊரு பிரபலங்களும் கொரோனா நன்கொடையை வாரி வழங்கினர். இப்படி வழங்கப்பட்ட நன்கொடைகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கோயில் கட்டிய நிகழ்வும் அரங்கேறியது.
இதுதவிர, ஆப்பிரிக்காவில் இருந்து ஆரம்பித்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியது. இந்தியாவில் கடந்த ஜுன்- ஜுலை மாதங்களில் படையெடுத்த வெட்டுகிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, உத்திரபிரதேசம் போன்ற 9 மாநிலங்களில் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தியது. இதனால் ராஜஸ்தானில் அதிகப்பட்சமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகியதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இல்லாவிட்டாலும் நீலகிரி மற்றும் தர்மபுரியில் வித்தியாசமான வெட்டுகிளிகள் இருந்ததையும் பார்க்க முடிந்தது.
அடுத்து, கடந்த 1999 ஆம் ஆண்டு ஏற்ட்ட சூப்பர் சூறாவளிவளிக்குப் பிறகு வங்காள விரிகுடாவில் மிகப் பெரிய சூறாவளி ஒன்று ஏற்பட்டது. அதுதான் ஆம்பன் சூறாவளி. இதனால் மேற்கு வங்கம் பலத்த சேதங்களை சந்தித்தது. சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சூறாவளியினால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் உயிரிழப்பு 86 ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏறபட்ட பேரழிவு. கலிபோர்னியா காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து ஒட்டுமொத்தமாக 4 மில்லியன் ஏக்கர்களை காவு வாங்கி இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் படு மோசமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த தீ விபத்து கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டதை விடவும் பல மடங்கு பெரியது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டு இருந்தனர். வெப்பநிலை மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிலும் தீவிபத்து ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் பரவலான இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ அதன் சுற்றுச்சூழலை மோசமாக பாதித்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து மியான்மர் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்து. இந்தக் கடற்கரை நகரில் 6 வருடங்களுக்கு முன்பு பராமரிப்பின்றி வைக்கப்பட்ட 2,780 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த சிதறியதால் ஏற்பட்ட சேதம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் பெய்ரூட் கடற்கரை ஒட்டிய 2 கிலோ மீட்டர் சுற்றளவு முழுவதும் பெரும் பேரழிவை சந்தித்து இருக்கிறது. அதோடு இந்தப் பாதிப்பினால் 2.50 லட்சம் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்து, அக்டோபர் இறுதியில் ஏஜியான் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தினால் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளின் பல நகரங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. இதனால் 116 பேர் உயிரிழப்பு மற்றும் 1,035 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவாக இருந்தது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வாளர்கள் கணித்து இருந்தனர்.
அடுத்து ரஷ்யாவில் உள்ள ஒரு நன்னீர் ஏரியில் கடந்த மே 29 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு விபத்து பல உலக நாடுகளை அதிர வைத்தது. துருவ ஆர்டிக் பகுதியில் உள்ள அந்த நன்னீர் ஏரியில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் எரிபொருள் கலந்ததால் ஒட்டுமொத்த ஏரியும் ரத்தக் கடாக மாறியது. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய எண்ணெய் விபத்து நடைபெற வில்லை என்று பல உலகத் தலைவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
அடுத்து உலகின் அதிகப் பனிப்பொழிவு இடமான அண்டார்டிகாவில் பச்சை பனிப்பொழிவு ஏற்பட்டது. இது உலக விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியது. நம்முடைய இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவினால் மக்கள் நடுரோட்டில் மயங்கி விழுந்த அவலம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல கடந்த மாதம் 26 ஆம் தேதி கரையைக் கடந்த நிவர் புயலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பலத்த சேதத்தை விளைவித்தன. புதுச்சேரி மாமல்லபுரம்- மரக்காணம் அருகே கரையைக் கடந்த இந்தப் புயலால் தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இப்படி 2020 முழுக்க சேதங்களும், சிக்கல்களும் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் அடுத்த புத்தாண்டு பற்றிய எதிர்ப்பார்ப்பு மக்களிடம் இப்போதே ஆரம்பித்து விட்டது. வரும் 2021 முழுவதும் நல்ல பொழுதாக வேண்டும் என்பதே அனைவதின் விருப்பமாகவும் இருக்கிறது.