சர்ச்சைக்குரிய கேரள ப்ரீ வெட்டிங் போட்டோஸ்… இணையத்தில் இருந்து நீக்கமா???
- IndiaGlitz, [Monday,November 02 2020]
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி சர்ச்சைக்குரிய சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். அந்தப் புகைப்படங்களில் இளம் ஜோடிகள் இருவரும் மென்பட்டு போன்றிருக்கும் வெள்ளைநிற போர்வைக்குள் தேயிலை காட்டுக்கு நடுவே சுற்றித் திரிவது போலவும் ஒருவருக்கு ஒருவர் அடித்துப் பிடித்து ஓடுவது போலவும் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சிறிது முகம் சுளிக்க வைப்பதைப் போன்று இருந்ததால் அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவிலும் திருமணத்தின்போது ப்ரீ வெட்டிங்க் போட்டோ எடுப்பது தற்போது டிரெண்டிங்காக மாறியிருக்கிறது. அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த லட்சுமி ஹ்ருஷி-கார்த்திக் எனும் ஜோடியினர் தங்களது திருமணத்தை அடுத்து ப்ரீ வெட்டிங்க் போட்டோக்களை எடுத்து குவித்து இருக்கின்றனர். மேலும் அந்த போட்டோ ஷீட்டிங்கை கார்த்திக்கின் நண்பர் அகில் கார்த்திக் என்பவர் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி அந்த ஜோடி திருமணத்தை முடித்துக் கொண்டு தங்களது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டனர். அந்தப் புகைப்படத்தை வெளியிட்ட உடனே இணையத்தில் கடும் வைரலை ஏற்படுத்தியது. ஆனால் சிலர் அந்தப் புகைப்படங்களுக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். மேலும் ஆணுறை விளம்பரத்துக்கு வருவதுபோல இருக்கிறது எனவும் நிர்வாணத்தைக் காட்டுவதாக இருக்கிறது எனவும் அவதூறான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இதனால் அந்தப் புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்கிவிடுமாறு பலரும் அந்த இளம் ஜோடிக்கு ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில் தற்போது இதுகுறித்து லட்சுமி ஹ்ருகி ஊடகத்திடம் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில், “தொடக்கத்தில் எங்கள் பெற்றோர்கூட அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு நாங்கள் ஏன் இப்படி செய்ய விரும்பினோம் என்பதை அவர்களுக்கு விளக்கினோம். பிறகு அவர்கள் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தார்கள். ஆனால் எங்கள் உறவினர்கள் பலர் நாங்கள் மேலை நாடுகளை காப்பி அடிப்பதாகக் குற்றம் சாட்டினார்கள்.
இதெல்லாம் தேவையா? நமது பண்பாட்டை மறந்து விட்டீர்கள். அந்தப் புகைப்படங்களை அகற்றும்படி பலர் வலியுறுத்தினார்கள். பலர் எங்களை குடும்ப வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து நீக்கினார்கள். ஆனாலும் அந்தப் படங்களை அகற்றுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். அப்படி அகற்றினால் நாங்கள் குற்றம் செய்ததாக நாங்களே ஒப்புக்கொண்டதாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. படிப்பிடிப்பின்போது மென்பட்டுப் போர்வைக்குள்ளே ஆடை அணிந்தே இருந்தோம்“ எனத் தெரிவித்து இருக்கிறார்.