கொரோனாவை அழிக்கும் எல்.இ.டி பல்புகள்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!
- IndiaGlitz, [Wednesday,December 16 2020]
பொருட்கள் மற்றும் சுவர்களின் மீது தங்கி இருக்கும் கொரோனா வைரஸை மிக எளிதாகவும் விரைவாகவும் அழிக்கும் புதிய முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்காக புற ஊதா கதிர்களைக் கொண்டு இயங்கும் எல்.இ.டி பல்புகள் (ஒளி உமிழும் டயோட்கள்) தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த எல்.இ.டி பல்புகள் புற ஊதா கதிர்களைக் கொண்டு கொரோனா வைரஸை மிக எளிதாகவும் விரைவாகவும் அழித்து விடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வினை ஒளிவேதியியல் மற்றும் ஒளி உயிரியியல் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டு உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வது உலகிலேயே எளிதாக ஆக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி பல்புகளை பயன்படுத்தி கொரோனா வைரஸை மிக எளிதாகவும் அதே சமயத்தில் விரைவாகவும் கொல்ல முடிகிறது.
தற்போது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 7.37 கோடியாக அதிகரித்து உள்ளது. உயிரிழப்பும் 16.40 லட்சமாக அதிகரித்து உள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 3.10 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். நேற்று ஒரே நாளில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 2,716 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஒட்டுமொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1.71 கோடியாக அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.