விபத்தில் சிக்கியவரை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கமல் எழுதிய கவிதை

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

நேற்று கர்நாடக மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் மிதந்தபோது அவருக்கு உதவாமல் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தோர்களுக்கு எழுந்த கண்டனங்கள் குறித்து பார்த்தோம் அல்லவா

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் பல விஷயங்களில் தீர்க்கதரிசி என்று ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாமல்,வேடிக்கை பார்ப்பவரைச் சாடி பல வருடங்களுக்கு முன் கமல் எழுதிய கவிதை ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஞாபகப்படுத்தியுள்ளார். இனிமேலாவது விபத்தில் சிக்கியவரை வேடிக்கை பார்க்காமல் அவர்களுடைய உயிரை காப்பாற்ற பொதுமக்கள் உதவ வேண்டும் என்பதே கமல் உள்பட அனைவரது கோரிக்கைகள் ஆகும்.

தற்போது கமல் எழுதிய அந்த தீர்க்கதரிசன கவிதையை பார்போமா!!

தெருப்பாடகன்

ஒற்றி ஒற்றி எடுத்தும் சிவப்பாய்
கசிந்தது காயம்
சுற்றி நின்றகூட்டத்தின் நிழலில்
காயம் சரியாய்த் தென்படவில்லை
சற்றே உற்று தெளிவாய்ப் பார்த்ததில் சின்னக்குழிவு பிடரியின் நடுவில்
விட்டுவிட்டு வரும் சிவப்புக்கு நடுவே
தட்டுதட்டாய் துருத்தியதெலும்பு
ரத்தச் சகதியில் சுற்றி நினறவர்
காலணி செய்த ரண ரங்கோலி
போக்கு வரத்துக் கிடைஞ்சலில்லாமல்
ரோட்டின் ஓரம் நகர்த்தினோம் அவனை
பான்ட்டுப் பையில் பர்சும் இல்லை, யார்? எனக் கேட்டால் பதிலும் இல்லை
இரண்டு கட்டையில் காந்தாரத்தில்
ஸ்ருதி பிசகாமல்
கேட்டவைக்கெல்லாம் ஸ்வரமாய் பிடித்தான்
“நிறைய ரத்தம் பிழைப்பது கஷ்டம்”
வேடிக்கை பார்க்கும் பெரியவர் சொன்னார்.
அதைக் கேட்டதுபோல் அவன் பாடிய ஸ்வரத்தை
மாறறிப் பாடினான், கீழ் ஸஜ்ஜமத்தில்.
“கா”வை நிறுத்தி “ஸா” வென்றிசைத்தான்
அடுத்த கேள்வி அனைத்திற்கும் அவன்
“ஸா-கா” என்றான் ஸ்ருதிப் பிழையின்றி
“பாட்டுக் கலைஞன்! கூட்டத்தில் ஒருவர் புதிர் விடுவித்தார்
அதுவும் கேட்டது போல் அவன்
இசைக்கும் ஸ்வரத்தை உடனே இழந்தான்
வெற்றுச் சொல்லாய் ஸா-கா என்றான்
சாவைப் பற்றிய அறிவிப்பென்றார்
ஒதுங்கி நின்ற ஓர் தமிழாசிரியர்
பக்கத்து ஊரில் மருத்துவ வசதி,
பாதி வழியிலே உயிர் பிறிந்ததினால்
காய்கறி லாரியில் ஊரவலம் போனான்
சுற்றி நின்றதால் சுற்றமா என்ன?
அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டுப் போனோம்
என்றோ வானொலி கீதம் இசைக்கையில்
அல்லது பச்சைக் காய்கறி விற்கும் சந்தையில்
ஸா கா என்றவன் நினைவுகிளம்பும்
ஸா-கா என்று நானும் பாடி அவன்
காந்தாரத்தைக் கொப்பளித்துமிழ்வேன்
குளிக்கும்போது
நினைவிழந்தாலும் என்னைப் போலவன் ஸ்ருதி பிசகாதவன்
அவன் பாடகனா இல்லை பாடத் தெரிந்த வெறும்பாதசாரியா