கமல்ஹாசனின் கருத்தாழமிக்க அரசியல் கருத்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,November 07 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வி இனி தேவையில்லை. அவர் அரசியல் களமிறங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. அரசியல் என்ற திரைப்படத்திற்கு பூஜை போட்டு ஆரம்பகட்ட பணியையும் தொடங்கிவிட்டார். இனி படப்பிடிப்புக்கு சென்று படத்தை ரிலீஸ் செய்வது தான் அடுத்த வேலை, அதாவது தேர்தலை நின்று ஆட்சியை பிடிப்பதுதான் அடுத்த வேலை

இன்றைய அரசியல்வாதிகளிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமானவராக கமல்ஹாசன் இருக்கின்றார். ஒரு நடிகர் என்ற புகழை வைத்து கொண்டு மட்டும் அரசியலில் இறங்கினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்பதை சிவாஜி முதல் பல நடிகர்களை உதாரணமாக பார்த்துள்ளோம். ஆனால் கமலிடம் உள்ளது தொலைநோக்கு அரசியல். சாக்கடைஅரசியலை சந்தனமாக மாற்ற விரும்பும் ஒரு முயற்சி. நாளையே சந்தனமாக மாற்ற முடியாது என்றாலும் இது ஒரு ஆரம்ப முயற்சி. 'விதை நான் போட்டது' என்று அவருடைய படத்தில் வரும் வசனம் போன்றது இந்த முயற்சி

அட்டூழியங்கள் நிறைந்திருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புரட்சியாளர் தோன்றி நாட்டை சீர்திருத்தியுள்ளனர் என்று வரலாற்றில் படித்திருக்கின்றோம், ஏன் இந்தியாவில் கூட பல புரட்சியாளர்கள் தோன்றியுள்ளார்கள், அந்த வகையில் தமிழக அரசியலை மட்டுமின்றி இந்திய அரசியலையும் திருத்தும் வல்லமை உள்ள ஒரு புரட்சியாளராகவே மக்கல் அவரை பார்க்கின்றனர்.. அந்த வகையில் அவருடைய பேச்சும், செயலும் இருப்பதால் இந்தியா ஒரு தூய்மையான அரசியலை நெருங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கருதப்படுகிறது.

கமல்ஹாசனின் அரசியல் பேச்சுக்கள், பேட்டிகளை உன்னிப்பாக கேட்டால் இதை புரிந்து கொள்ளலாம். கமல்ஹாசனின் புரட்சிகரமான கருத்துக்கள் கொண்ட அவரது பேட்டிகளையும் பேச்சுக்களையும் இப்போது பார்ப்போம்

ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு கமல் பதில்:

ஒரு டாக்டர் சுகாதார துறை அமைச்சர் ஆகணும், ஒரு இஞ்சினியர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகணும், ஒரு பேராசிரியர் கல்வி அமைச்சர் ஆகணும், ஹார்வர்டு பல்கலையில் சட்டம் படித்த ஒருவர் சட்ட அமைச்சராக வரவேண்டும். அவ்வாறு வந்தால் கண்டிப்பாக அந்தந்த துறைகள் முன்னேறும். மொத்தத்தில் இந்த நாடு கல்வி கற்றவர்கள் கையில் இருக்கணும்'. காமராஜர், எம்ஜிஆர் போன்ற அதிகம் கல்வி கற்காதவர்கள் சிறந்த ஆட்சியை கொடுத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்று தொழில்நுட்பம் அதிகம் உள்ள நிலையில் அந்த தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த கண்டிப்பாக கல்வி கற்ற அரசியல்வாதிகள் தேவை

'ஒரு மரணம் குற்றவாளியை நிரபராதியாக மாற்றாது. அப்படியென்றால் ஹிட்லரை அனைவரும் மன்னித்து இருக்கணும், மரணம் ஏற்பட்டாலும் குற்றம் செய்திருந்தால் அவர் குற்றவாளியாகவே கருதப்பட வேண்டும். இந்த கருத்தை கமல் யாருக்காக கூறினார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை.

அரசியல்வாதி என்பவர் உங்கள் தெருவில் இருந்து உங்களில் ஒருவராக இருந்தவர். அவர் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர் இல்லை. எனவே முதலில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தவறுகளை திருத்தினால், அவர்களில் இருந்து வரும் அரசியல்வாதியும் நல்லவராகிவிடுவார்' என்று ஒரு பேட்டியில் கமல் கூறியிருந்தார்

நான் நேர்மையான அமைச்சர், என்மீது எந்த வழக்கும் கிடையாது. நான் வாதாடுகிறேன் கமல்ஹாசனுடன் என்று எந்த அமைச்சராவது சொல்ல சொல்லுங்கள், எனக்கு ஜாதி கிடையாது, எனக்கு ஜாதி அரசியல் வேண்டாம் என்று எந்த அரசியல்வாதியையாவது சொல்ல சொல்லுங்கள், அப்படி சொன்னால் அவர் தான் என் தலைவர். அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே இப்போது இல்லை.

கடந்த சில வருடங்களுக்கு முன்பே "அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று கமலிடம் கேட்டபோது அவர் கூறியது, "நான் வாக்களிக்க ஆரம்பித்தது முதலே அரசியலில்தான் இருக்கிறேன்" என்று என்று பதில் கூறினார். இந்த பதிலை கூறியது அனேகமாக கமல்தான் முதல் ஆளாக இருப்பார். இதுவே இவர் ஒரு வேற மாதிரியான அரசியல்வாதியாக வருவார் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது

கமல் மீது பலர் கூறும் ஒரு குற்றச்சாட்டு ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு, அவர் மறைந்த பின்னர் அரசு மீது கோபப்படுகிறார், ஊழல் குறித்து ஆவேசமாக பேசுகிறார் என்பதுதான். இதற்கு அவர் அளித்த பதில் இதோ: ஜெயலலிதா இருந்தபோது அரசை எதிர்த்து ஒருவர் வழக்கு போடுவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயம், ஆனால் நான் செய்தேன், வழக்கு போட்டு வெற்றியும் பெற்றேன். நாட்டை விட்டே போகிறேன் என்று கூறியது எனக்கு அவமானம் அல்ல, அந்த ஆட்சிக்கு தான் அவமானம். சோழ நாட்டை விட்டு சேர நாட்டிற்கு செல்கிறேன் என்று கம்பன் கூறியது சோழ நாட்டிற்கு எந்த அளவுக்கு அவமானமோ, அந்த அளவுக்கு நான் கூறியது அன்றைய அரசுக்கு அவமானம். கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது அவரிடம் நேரடியாக சென்று ஒருசில விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திறுக்கின்றேன்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே ஏன் கமல் விமர்சனம் செய்கிறார் என்பது பலரது குற்றச்சாட்டு, அதற்கு கமல் கூறிய விளக்கம்: நானும் என் நண்பர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டது இங்குதான். நான் இந்த மதத்தில் இருந்ததால் இந்த மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் எனக்கு தெரிய வந்தது. அதனால் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கின்றது என்பதுதான் எனது கருத்து.

ஒரு தலைவரை எப்படி தேடுவது என்பது குறித்த கமலின் பேச்சு இது: நீங்கள் உங்களுக்காக தலைவரைத் தேடாதீர்கள் உங்களுக்கு சேவை செய்ய ஒரு சேவகனை நியமியுங்கள். அது கடமை அல்ல பொறுப்பு. உங்கள் நிலத்தில் வேலைக்கு ஆள் வைக்க வேண்டுமானால் வேலை தெரியுமா, இதற்கு முன்னர் எங்கு வேலை செய்துள்ளீர்கள் என்று கேட்போம் அல்லவா அது போன்றது தான் இதுவும். இதற்கு முன் என்ன செய்தார்கள் என்று கேட்டு நியமியுங்கள். இதை அறிவுரையாக சொல்ல வரவில்லை நினைவுபடுத்துகிறேன்.

விவசாய நிலத்தில் கார்போஹைட்ரேட் தொழிற்சாலை அமைப்பது குறித்த கமலின் எதிர்ப்பு பேச்சு இது: விளைநிலத்தில் ஹைட்ரோ கார்பன் கிடைக்கிறது என்பதற்காக அதை பொடி செய்து சாப்பிட முடியுமா? கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கி விட்டோம், இனியாவது விழித்துக் கொள்வோம்.

வேளாண்துறை குறித்து விவசாயி குறித்து இதுவரை எந்த ஒரு விவசாயியும், விவசாயம் சார்ந்த அமைச்சரும் சொல்லாத கருத்தை கமல் கூறியுள்ளார். அது என்ன தெரியுமா? வேளாண்துறையை தொழில்துறையா மாற்றினால் தான் அனைவரும் வாழ முடியும். முன்னேற்றம் என்ற பெரில் இயற்கையை சூறையாடுவது நாட்டையே பாதிக்கும். அதனை நாம் அனுமதிக்க கூடாது.

மேடை பேச்சுக்கள், அரசியல் சார்ந்த பேட்டிகளில் மட்டுமின்றி அவர் சினிமாவிலும் பல மறைமுக, நேரடி அரசியல் வசனங்களை எழுதியுள்ளார், பேசியுள்ளார் என்பது தெரிந்ததே. 'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு', 'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா', 'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது', 'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்', 'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை', 'மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' - இந்த வசனங்களை கேட்டு, ஆழ்ந்து யோசித்தால் அதில் அரசியல் இருப்பது புரிய வரும்

மொத்தத்தில் கமல் அரசியல் களத்தில் புகுந்துவிட்டார், அரசியலும் தூய்மையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டது என்று மக்களும் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாவில் வெற்றி பெற்று உலகம் முழுவதும் புகழ் பெற்ற கமல், அரசியலிலும் தனது புரட்சியை விதைப்பாரா? என்பதை இனிவரும் காலங்களில் அவர் எடுக்கும் முடிவுகளில் தான் இருக்கின்றது என்பதால் அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது முயற்சிகள் வெற்றியடைய இந்த 63வது பிறந்த நாளில் IndiaGlitz தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

More News

பாதி பணியை முடித்துவிட்டார் சூர்யா: விக்னேஷ் சிவன் தகவல்

சூர்யாவின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு ஒரே ஒரு பாடலை தவிர அனைத்தும் முடிந்துவிட்டது.

கோலையுங்குடியையும் உயரச்செய்வோம்: கமல்ஹாசனின் பிறந்த நாள் செய்தி

உலக நாயகன் கமல்ஹாசனின் 63வது பிறந்த நாள் இன்று. இன்றைய தினம் கமல்ஹாசனின் ரசிகர்கள் பல்வேறு பிறந்த நாள் நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ள நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பிறந்த நாள் செய்தியை

சென்னையை கலக்கும் கமல்ஹாசனின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள்

இந்த ஆண்டு கமல்ஹாசனின் ஸ்பெஷல் பிறந்த நாள். அரசியல் களம் குதிக்கும் பிறந்த நாள் என்பதால் அரசியல் ஸ்டைலில் அவருடைய ரசிகர்கள் போஸ்டர்களை சென்னை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்

ரோஸ் டெய்லருக்கு ஆதார் கிடைக்குமா? சேவாக் கிண்டல்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், ஓய்வு பெற்றாலும் தனது நகைச்சுவையான டுவீட்டுக்கள் மூலம் அவ்வப்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருப்பார்

வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டாரா? வைரலாகும் வீடியோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகுத்தறிவு கொள்கை கொண்டவர் என்றும், அவர் எந்த மதத்தையும் சாராதவர் என்றும் தான் தமிழக மக்கள் இன்று வரை நம்பிக்கொண்டிருக்கின்றார்.