செவாலியே விருது எனது பணிக்கான ஊக்கி. கமல்ஹாசன்
Monday, August 22, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது அளித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பின்னர் தமிழ் நடிகர் ஒருவருக்கு மீண்டும் செவாலியே விருது கிடைத்துள்ளதால் திரையுலகினர் நேற்று முதல் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருது கொடுத்த அரசுக்கும், வாழ்த்திய பெரிய மனிதர்களுக்கும், ரசிகர்களுக்கும் கமல் தனது நன்றியை ஒரு ஆடியோ உரையின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த உரையில் அவர் கூறியிருப்பதாவது:
பிரெஞ்ச் அரசு கலை இலக்கியத்திற்காக செவாலியே விருது எனக்கு அளிக்க முன்வந்ததை பெருமிதத்துடன் பணிவுடன் ஏற்கிறேன்.இவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய அய்யா சிவாஜி கணேசன் அவர்களையும் வடநாட்டு பாமரரையும் அறியச்செய்த சத்யஜித்ரே அவர்களையும் கரங்கூப்பி வணங்குகிறேன். இந்த செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவின் பிரான்ஸ் தூதர் அவர்களுக்கும் எனது நன்றி
இனி நாம் செய்ய வேண்டிய கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். கலை கடற்கரையில், கை மண்ணளவு அள்ளிவிட்ட பெருமை, எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது? என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைக்கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரைமோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து, பெருவேச மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து, உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது.
இதுவரையான என் கலைப் பயணம், தனிமனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி, எழுத்தும், கலையும் அறிவித்த பெருங்கூட்டத்துடன் நாம் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள், 4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி, பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம். என்னைப் பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறுவெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது.
நன்றியுடன் உங்கள் கமல்ஹாசன்!
இவ்வாறு கமல்ஹாசன் தனது ஆடியோ உரையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments