போரில் வீட்டைப் பறிக்கொடுத்த பெண்மணி செய்த காரியம்… மனதை உருக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,February 28 2022]

உக்ரைன் நாட்டில் 5 ஆவது நாளாக ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி இருக்கிறது. நேற்று கார்கிவ் பகுதியில் நடைபெற்ற இராணுவ தாக்குதல்களை உக்ரைன் நாட்டு மக்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு தகர்த்துவிட்டதாக அந்நாட்டின் சார்பாக தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் அதிபர் புடின் இராணுவ ஆயுதங்களை அதிக எச்சரிக்கையுடன் வைத்திருக்குமாறு அறிக்கை வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உக்ரைன் நாட்டு மக்கள் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்காகத் துணிச்சலுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய இராணுவம் ஆங்காங்கே குடியிருப்புகளின் மீது ஏவுகணைகளை வீசி சேதப்படுத்தி வருகிறது. விமான நிலையங்கள் முதற்கொண்டு பள்ளிகள், வங்கிகள், சூப்பர் மார்க்கெட் போன்றவை சூறையாடப் பட்டிருகின்றன.

இந்நிலையில் ஒக்ஸோனா குலென்கா எனும் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ரஷ்யா இராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனால் ஒரு பெண்ணின் வீட்டில் அனைத்து ஜன்னல்களும் உடைந்து ஒட்டுமொத்த வீடும் சேதம் அடைந்துள்ளன. இத்தனை துயரத்திற்கு மத்தியில் அந்தப் பெண் உக்ரைன் நாட்டின் தேசியப் பாடலைப் பாடியபடி கண்ணாடி துண்டுகளை அப்புறப் படுத்துகிறார். மேலும் வாழ்க உக்ரைன் என்று வாழ்த்து மொழியுடன் கண்ணீர் சிந்துகிறார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பலரது மத்தியில் நெகிழ வைத்துள்ளது.

இதேபோல மற்றொரு பெண்ணின் வீடானது ஏவுகணை தாக்குதலில் முற்றிலும் தீப்பிடித்து எரிகிறது. தீப்பிடித்து எரியும் தனது வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டு அந்தப் பெண் அவருடைய குழந்தையுடன் அதிபர் புடின் அவர்களே உங்களுக்கு நன்றி. நீங்கள் தொடுத்த போரால் என்னுடைய வீடு தீப்பற்றி எரிகிறது. இது குளிருக்கு இதமாக இருக்கிறது என்று புகழ்வதைப் போல புடினை கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இவர்களைப் போலவே ஆங்காங்கு ரஷ்யா இராணுவத்தைப் பார்க்கும் உக்ரைன் நாட்டு பொதுமக்கள் எங்கள் நாட்டிற்குள் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி வருவதையும் அவர்கள் தங்கள் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்றையும் காண முடிகிறது.