உக்ரைனியர்கள் அடிக்குறாங்க, எங்களை ரஷ்யாவுக்கு அனுப்பிடுங்க: தமிழ் மாணவரின் அதிர்ச்சி வீடியோ!
- IndiaGlitz, [Tuesday,March 01 2022]
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று கூட பார்க்காமல் இந்திய மாணவிகளையும் தாக்குகிறார்கள், எனவே எங்களை எப்படியாவது உக்ரைனில் இருந்து மீட்டு ரஷ்யாவுக்கு கொண்டு சென்று விடுங்கள் என தமிழ் மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற தமிழ் மாணவர் ஒருவர் அங்கு சிக்கிக் கொண்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கார்கீவ் நகரில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இந்திய மாணவர்கள் சிலர் வெளியே போய் உள்ளார்கள். போன இடத்தில் பாம் வெடித்து கர்நாடகாவை சேர்ந்த ஒரு மாணவர் இறந்துள்ளார். எங்களுக்கு இதுவரை எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை.
நாங்கள் இப்போது ரயில் மூலம் வெளியேறலாம் என்றாலும் கூட அதிலும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. நாங்கள் இருக்கும் இடமான கார்கீவ் நகரில் கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு கூட பாதுகாப்பு இல்லை. அப்படியே ரயில்வே ஸ்டேஷன் சென்றாலும் ரயிலில் ஏறுவதற்கு காசு கேட்கிறார்கள், உக்ரைன் நாட்டு குடிமக்களை மட்டும்தான் இலவசமாக அனுப்புகிறார்கள். அதுமட்டுமின்றி குண்டுவெடிப்பில் ரயில் தண்டவாளங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயிலில் செல்வது பாதுகாப்பு இல்லை.
மேலும் எங்களை உக்ரைனியர்கள் துப்பாக்கி, கத்தியால் மிரட்டுகிறார்கள், மாணவிகளையும் அடிக்கின்றார்கள். எங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை தான் உள்ளது. எனவே இந்திய அரசு ஏதாவது செய்து எங்களை மீட்க வேண்டும். நாங்கள் இருக்கும் இடமான கார்கீவ் நகரில் இருந்து ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ எல்லைக்கு செல்ல 45 நிமிட பயணம் தான். இங்கிருந்து நாங்கள் மாஸ்கோ எல்லைக்கு செல்ல ஒரு பேருந்து ஏற்பாடு செய்தால் கூட நாங்கள் ரஷ்யாவுக்கு சென்று விடுவோம். அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பி விடுவோம்.
எனவே தயவுசெய்து இந்திய அரசு ஏதாவது உதவி செய்து எங்களை மீட்க வேண்டும். இப்போது எங்களுக்கு சாப்பிட உணவு இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகூட இல்லை. தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள்’ என்று தமிழ் மாணவர் அந்த வீடியோவில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து போற வழியில பாம் வெடிச்சிருச்சி -கார்க்கீவில் தவிக்கும் மாணவர்கள் #SunNews | #UkraineConflict | #RussiaUkraine pic.twitter.com/XPITObInZ2
— Sun News (@sunnewstamil) March 1, 2022