பல ஆண்டுகளாகச் சிறுநீரைக் குடித்து வாழ்ந்து வரும் விசித்திர மனிதன்… ஆச்சர்யத் தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,May 04 2022]

மனித உடல் வெளியேற்றும் கழிவுநீரான சிறுநீரை இங்கிலாந்து நாட்டில் வசித்துவரும் ஒருவர் பல ஆண்டுகளாகத் தினம்தோறும் குடிக்கிறார் என்ற தகவலையே நம்மால் நம்ப முடியவில்லை. அதற்கு அவர் கூறும் காரணங்கள் இதைவிட ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.

34 வயதான ஹாரி மாட்டாடின் என்பவர் இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரை சேகரித்து வைத்து குடித்து வருவதாக செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஹாரி தினம்தோறும் 200 மில்லி லிட்டர் சிறுநீரை அருந்துவதாகவும் ஒருவேளை பழைய சிறுநீராக இருந்தால் அதில் சிறிதளவு புதிய சிறுநீரை சேர்த்து அருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

காரணம் பழைய சிறுநீர் அதிகளவு துர்நாற்றம் கொண்டதாக இருக்கும். அதில் சிறிதளவு புதிய சிறுநீர் சேர்க்கும்போது அதிலுள்ள துர்நாற்றம் குறைந்துவிடும் எனக் கூறுகிறார். மேலும் சிறுநீரின் துர்நாற்றம் மற்றும் சுவை தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறும் ஹாரி மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ளவும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் இப்படி செய்வதாகத் தெரிவித்துள்ளார். சிறுநீரை அருந்தும்போது மனம் அமைதி அடைந்து சமாதானமாக அடைவது போன்று உணர்வதாகவும் ஹாரி குறிப்பிட்டுள்ளார்.

ஹாரி, சிறுநீரை அருந்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை முகத்தில் பூசி மசாஜ் செய்வதற்கும் பயன்படுத்துகிறாராம். இதனால் புத்துணர்ச்சி அடைந்து இளமையான தோற்றம் கிடைத்திருக்கிறது என்றும் ஹாரி கூறியுள்ளார்.

ஆனால் ஹாரியின் கருத்துகளைக் கேட்ட மருத்துவர்கள் சிறுநீரை அருந்தும்போது உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்துபோய் விடும். இதனால் உடலுக்கு ஆபத்து ஏற்படலாம். கூடவே சிறுநீரில் ஏகப்பட்ட கிருமிகள் அடங்கியிருக்கும், இதுவும் நல்லதல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.