ஆதார் பாதுகாப்பு குளறுபடி: 5000 அதிகாரிகள் மீது நடவடிக்கை

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை தேவை என்பதின் அவசியத்தை அறிவுறுத்திய மத்திய மாநில அரசுகள் அந்த ஆதார் அட்டையுடன் அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க வலியுறுத்தியது. இதனால் தனிப்பட்ட நபர்களின் விபரங்கள் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்த போது, ஆதார் ஆணையம் பாதுகாப்பை உறுதி செய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.500 கொடுத்தால் பத்தே நிமிடங்களில் எவருடைய ஆதார் விவரங்களும் கிடைக்கும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. இதனை முதலில் மறுத்து அந்த பத்திரிகை மீது வழக்கு போடவுள்ளதாக கூறிய ஆதார் ஆணையம் தற்போது 5000 ஆதார் ஆணைய அதிகாரிகளின் அதிகாரத்தை பறித்துள்ளது.

இதன்படி தற்போது ஆதார் பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகவும், ஆதார் எண்ணுக்கு உரிய நபரின் பயோமெட்ரிக் அடையாளம் மூலம் மட்டுமே ஆதார் விவரங்களைக் கையாள முடியும் என்ற வகையில் பாதுகாப்பு அம்சம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.