உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: மரண தண்டனை ரத்து செய்யப்படுமா?
- IndiaGlitz, [Sunday,June 21 2020]
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற கல்லூரி மாணவி தன்னுடன் படித்த சங்கர் என்ற மாணவரை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்தார். இந்த காதலுக்கு சாதியைக் காரணம் காட்டி கௌசல்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கௌசல்யா, சங்கரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த தம்பதிக்கு தொடர்ந்து கௌசல்யாவின் பெற்றோர்கள் தரப்பிலிருந்து மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி கௌசல்யா மற்றும் அவரது கணவர் சங்கர் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம கும்பல் ஒன்று அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கௌசல்யா மட்டும் படுகாயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வந்தது. அதில் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கௌசல்யா தாய் உள்பட மூவர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மரண தண்டனையை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை உள்பட ஆறு பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல் கௌசல்யா தாய் உள்பட இருவர் விடுதலையை எடுத்து காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை வழங்க இருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கௌசல்யா தந்தை மரண தண்டனையிலிருந்து தப்பிப்பாரா? கௌசல்யாவின் தாய் உள்பட இருவருக்கும் தண்டனை கிடைக்குமா? என்பது நாளைய தீர்ப்பில் தெரியவரும்.