உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தண்டனை பெற்ற கௌசல்யாவின் தந்தை தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் இந்த வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம். மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், ஸ்டீபன் தங்கராஜூவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கௌசல்யாவின் தந்தை உள்பட தண்டனை பெற்ற அனைவரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை முடிந்த நிலையில் சமீபத்தில் ஜூன் 22ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்யப்படுவதாகவும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கௌசல்யாவின் தாய் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் விடுதலை செய்யட்டவர்களுக்கு தண்டனை வழங்க கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.