உடுமலை சங்கர் கொலை வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,November 15 2017]
கடந்த ஆண்டு தமிழகத்தையே குலுங்க வைத்த உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12ஆம் தேதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கல்லூரி மாணவரான சங்கர் கல்லூரி மாணவியான கவுசல்யாவை காதலித்தார். ஆனால் ஜாதியை காரணம் காட்டி இந்த காதலுக்கு கவுசல்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி சங்கர், கவுசல்யா ஆகிய இருவரும் உடுமலை பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுசல்யா பின்னர் குணமாகி நீலகிரியில் உள்ள ராணுவ கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 பேர்களை கைது செய்த உடுமலை போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் நடந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்களும், கவுசல்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி அலமேலும் நட்ராஜ் தெரிவித்தார். தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலையில் கொலையாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அறிய தமிழகமே பரபரப்புடன் காத்திருக்கின்றது.