இந்தியாவுக்கு எதிரான பேச்சு: உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்
- IndiaGlitz, [Saturday,February 02 2019]
உடுமலையில் நடந்த ஆணவக்கொலையில் கணவர் சங்கரை பறிகொடுத்த கவுசல்யா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சக்தி என்ற பறை இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களில் சக்தி மீது பாலியல் புகார் வந்தது என்பதும் இதுகுறித்து விசாரணை செய்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்ததோடு, அடுத்த 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் சக்தி பறை இசைக்கக் கூடாது என்றும் தண்டனை அளித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் கவுசல்யா, இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்தியாவை ஒரு தேசமாக தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தமிழக மக்களுக்கு எதிரான கருத்துக்களை திணித்து, தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாக இந்தியா வைத்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இந்தியா குறித்து கவுசல்யா பேசிய இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவர் பணிபுரிந்து கொண்டிருந்த குன்னூரிலுள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கவுசல்யாவை பணியிடை நீக்கம் செய்ததாக வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.