அந்தநாள் நிச்சயம் வரும்.. அனிதா நினைவு நாளில் உதயநிதியின் உருக்கமான ட்வீட்..!
- IndiaGlitz, [Friday,September 01 2023]
கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனிதாவின் ஆறாவது நினைவு நாளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
செல்வி அனிதா 12ஆம் வகுப்பு தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப்பெண் எடுத்திருந்தார். ஆனால் நீட் தேர்வில் அவர் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 86 மதிப்பெண் மட்டுமே எடுத்ததால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் சாதகமாக தீர்ப்பு வராததை அடுத்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் அதன்பின் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனிதாவின் ஆறாவது நினைவு நாளில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும். நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தநாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம்.
நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும். நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக…
— Udhay (@Udhaystalin) September 1, 2023