பாஜக-அதிமுக கட்டிய எய்ம்ஸ் மருத்துமனை இதுதான்… செங்கலை காட்டிய உதயநிதி ஸ்டாலின்!

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

ரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. முக்கியத் தலைவர்கள் இல்லாத இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பெற வேண்டும் என அதிமுகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்றும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் இத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணி செயலாளராகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாகத் தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட இருக்கும் அவர் தனது தந்தையைப் போன்று ஆழமான உரைநடையில் பேசாமல் மிக எளிமையான அதே நேரத்தில் நக்கலான பேச்சு நடையிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தப் பேச்சு நடையைக் குறித்து ஆரம்பத்தில் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தொடர்ந்து உதயநிதியின் பேச்சுநடை பெரும்பாலான மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று விழுப்புரம் சாத்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், நேற்று மதுரைக்கு பிரச்சாரத்திற்காக சென்று இருந்தேன். திரும்பி வரும்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்துவிட்டேன் எனக் கூறி ஒரு செங்கலை தேர்தல் பிரச்சாரத்தின் போது தூக்கி காட்டினார். இந்தப் புகைப்படம் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி இருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான திட்ட அறிக்கையை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்து இருந்தார். இதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரை தோப்பூர் பகுதியில் பிரதமர் மோடி அவர்களின் கரங்களால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த அடிக்கல் நாட்டு விழாவோடு சரி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான எந்த வேலைகளும் இதுவரை தொடங்கப்படவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே பாஜகவும், அதிமுகவும் இணைந்து கட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என்று உதயநிதி ஸ்டாலின் செங்கலை தூக்கிக் காட்டி இருக்கிறார். இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் கவனம் பெற்று இருக்கிறது.