விஜய்-ஸ்டாலின் சந்திப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,September 05 2019]
நடிகர் விஜய் தானுண்டு தனது திரைப்பட பணிகள் உண்டு என்று அமைதியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் விஜய்யை தேவையில்லாமல் அரசியல் பக்கம் இழுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ’விஜய் அரசியலுக்கு வந்தால்தான் வரவேற்பதாக தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் ’விஜய் அரசியலுக்கு வந்தால் எந்த பாதிப்பும் அதிமுகவுக்கு ஏற்படாது என்றும், விஜய் திமுகவில் இணைந்தாலும் அதிமுக அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறினார். இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஒரு சில ஊடகங்களும் விவாதம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இவையெல்லாம் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் குடும்ப விழாவில் விஜய் கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தங்களது குடும்ப விழாவில் விஜய் கலந்து கொண்டது குறித்தும் அதுகுறித்து வெளியாகி வரும் செய்திகள் குறித்தும் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். விஜய் அவர்கள் எங்கள் குடும்ப விழாவில் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டார். இதை வைத்து அவர் திமுகவில் இணைவதாக கூறுவது அபத்தம் என்றும் குடும்ப விழாவில் பங்கேற்ற ஒரு யதார்த்தமான சந்திப்பை அரசியலாக்குவது தேவையில்லாதது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு அரசியல் ஆசை ஒருகாலத்தில் இருந்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியல் களத்தில் இருப்பதால் இப்போது அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் அவரது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விஜய்யை அரசியலுக்கு இழுக்க ஒரு சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.