தேர்தலில் உதயநிதி போட்டியிடக்கூடாது...! புகார் அளித்த பாஜக...!
- IndiaGlitz, [Friday,April 02 2021]
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை வேட்பாளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யம் வேண்டும் என்று, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கிக் கொண்டு வருவதால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. பலரின் நாகரீகமில்லாத பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. திமுகவின் முன்னாள் அமைச்சர் ராசா முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதற்கு,கடும் கண்டனங்கள் வந்த நிலையில், அவரை 48 மணி நேரம் பிரச்சாரத்திற்கு செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, அண்மையில் பிரச்சாரத்தின் போது,அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி இறப்பிற்கு மோடி தான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் வந்த நிலையில் இருந்தது.
சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் மகள் பன்சுரி ஸ்வராஜ் டுவிட்டரில் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,உதயநிதி ஜி, உங்கள் அரசியல் பிரச்சாரத்திற்காக என் அம்மா பெயரை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் கூறுவது தவறானது. பிரதமர் மோடி அவர்கள் மீது என் தாய் மீது நல்ல கவுரவத்தையும், மரியாதையும் வைத்திருந்தார். எங்களுக்கு கஷ்டமான இருண்டகாலத்திலும், பக்கபலமாக இருந்தது கட்சியும், மோடி அவர்களும் தான். உங்களது பேச்சு எங்களை மிகவும் காயப்படுத்துகிறது என்று கூறி உதயநிதியையும், ஸ்டாலினையும், மோடியையும் அவர் டேக் செய்திருந்தார்.
உதயநிதி விமர்சித்தது தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளதால், அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், பிரச்சாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.