பிரியதர்ஷன் - உதயநிதியின் 'நிமிர்': திரை முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்
கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம் உள்ளிட்ட தரமான தமிழ் படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பிரியதர்ஷனின் அடுத்த படம் தான் 'நிமிர்'. இவருடைய இயக்கத்தில் முதல்முறையாக உதயநிதி நடித்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தின் நாயகனாக உதயநிதியை தேர்வு செய்ய என்ன காரணம் என்பது குறித்து பிரியதர்ஷன் விளக்கியபோது, 'இந்த படத்தின் கதைக்கு சாதாரண ஒரு முகம் தேவைப்பட்டது. உதயநிதி நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவருடைய சாதாரண பையன் போன்ற தோற்றத்தை வைத்து அவரை இந்த படத்தின் நாயகன் கேரக்டருக்கு தேர்வு செய்தேன். மேலும் அவரிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம், கேரக்டராக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினேன். அவரும் கேரக்டராகவே மாறி எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்' என்று கூறினார்
இந்த படம் மலையாளத்தில் பகத்பாசில் நடித்த Maheshinte Prathikaaram என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பகத்பாசிலுக்கு இணையாக உதயநிதி இந்த படத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பகத்பாசில் எவ்வளவு பெரிய நடிகர் என்பது 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்புரிந்திருக்கும்
இந்த படத்தில் உதயநிதியின் தந்தையாக பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியபோது, 'ஒரு நாள் பிரியதர்ஷன் சார் என்னை அழைத்து, அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சொன்னார். இதுவரை அவர் நான் நடித்த எந்த படமும் பார்த்ததில்லை. அதுவும் எனக்கு நல்லது தான். நாம் பெரிய நடிகர்களோடு நடிக்கும் போது அவர்களையே வியந்து பார்த்துக் கொண்டிருப்போம், அந்த மாதிரி இந்த படத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் சாரை வியந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். தெறி படத்துக்கு பிறகு நிறைய வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் எனக்கு வந்தன, அவற்றை ஒத்துக் கொள்ளவில்லை, பிரியதர்ஷன் சாருக்காக இந்த படத்தை ஒப்புக் கொண்டேன்' என்று கூறினார்.
உதயநிதிக்கு ஜோடியாக நமிதா பிரமோத் நடித்துள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், கஞ்சாகருப்பு உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை உதயநிதியின் 'ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பதை வரும் வெள்ளியன்று இந்த படத்தின் திரைவிமர்சனத்தில் பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments