ஜோதிகாவின் தஞ்சை பேச்சால் ஏற்பட்ட மாற்றம்: இயக்குனர் இரா சரவணனின் பதிவு!
- IndiaGlitz, [Friday,August 20 2021]
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் ’உடன்பிறப்பு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அங்கு உள்ள அரசு மருத்துவமனையின் அவலம் குறித்து ஆதங்கத்தோடு விழா ஒன்றில் பேசியிருந்தார். கோவில்களுக்கு செலவழிப்பதை விட அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்த வேண்டும் என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்தநிலையில் ’உடன்பிறப்பு’ படத்தில் இயக்குனர் சரவணன் அவர்கள் இது குறித்து தனது முகநூலில் ஒரு பதிவு செய்துள்ளார். ஜோதிகா பேசியதன் காரணமாக இன்று அந்த மருத்துவமனை நவீன முறையில் இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
உடன்பிறப்பே பட ஷூட்டிங்கில்தானே தஞ்சை பெரிய கோயில் குறித்து ஜோதிகா பேசியது சர்ச்சையானது? தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே ஷூட்டிங் நடந்தப்போ, அங்கே கர்ப்பிணிகளும் பிரசவமான தாய்களும் காத்துக் கிடந்ததை ஜோதிகா பார்த்தாங்க. முதல் நாள் டெலிவரியான குழந்தையோட ஒரு தாய் வராண்டாவில் உட்கார்ந்திருந்தது அவங்களை ரொம்ப அதிர வைச்சிருச்சு. அந்த ஆதங்கத்தையும் பரிதாபத்தையும்தான் அவங்க பேசினாங்க. பேச்சோட நிற்கலை. அந்த மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதி கொடுத்தாங்க. அவங்க பேச்சு பரபரப்பான நிலையில், அந்த மருத்துவமனையை மேம்படுத்த தமிழக அரசே நிதி ஒதுக்கியது. அப்போ டீனாக இருந்த மருதுதுரை சார் மருத்துவமனையைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார். மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தினப்ப, பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டச்சு. ஜோதிகா பேசியதால் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் இதெல்லாம்…
இயக்குனர் இரா. சரவணனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.