உபேர் கால் டாக்ஸி சி.இ.ஓ திடீர் ராஜினாமா
- IndiaGlitz, [Wednesday,June 21 2017]
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் 570 நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம் உபேர் கால் டாக்ஸி. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஓவுமான டிராவிஸ் கலாநிக் என்பவர் இன்று திடீரென தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் ஐந்து முக்கிய பங்குதாரர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக இவர் பதவி விலகியதாக தெரிகிறது.
“Moving Uber Forward” என்று தலைப்பில் உபேர் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் கடிதம் ஒன்றினை எழுதி இருந்ததாகவும், இந்த கடிதத்தில் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து டிராவிஸ் கலாநிக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் வாஷிங்டனில் இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டிராவிஸ் கலாநீக் கூட்டத்தின் முடிவில் தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். இருப்பினும் உபேர் குழுமத்தின் ஒரு பொறுப்பில் அவர் தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது. 40 வயதான டிராவிஸ் கலாநீக் கடந்த 2009ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்க்கது.