சுஜித் செய்தியை பார்த்து கொண்டிருந்த தம்பதியின் 2 வயது மகள் மரணம்!

  • IndiaGlitz, [Tuesday,October 29 2019]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியில் இரண்டு வயது சுஜித் என்ற சிறுவன் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சோகம் தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது

இந்த நிலையில் இது குறித்த செய்தியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த தம்பதியரின் அலட்சியம் காரணமாக அவர்களுடைய இரண்டு வயது மகள் பரிதாபமாக பலியாகியுள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதிக்கு ரேவதி சஞ்சனா என்ற 2 வயது மகன் இருந்தார். லிங்கேஸ்வரன் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் நடுக்காட்டிப்பட்டி சுஜித் குறித்த செய்தியை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்

இந்த நிலையில் தொலைக்காட்சியைப் பார்க்கும் ஆர்வத்தில் லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதியினர் தங்களுடைய இரண்டு வயது மகளை கவனிக்கத் தவறிவிட்டனர். சில நிமிடங்கள் கழித்து குழந்தையை காணவில்லை என அக்கம்பக்கத்தில் தேடியபோது குழந்தை குளியல் அறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தலைகுப்புற விழுந்து பரிதாபமாக இருந்தது.

உடனடியாக அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பெற்றோர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று கதறி அழுதனர். இதுகுறித்து தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்