ரூ.100 கோடி.. ரூ.150 கோடி.. அடுத்தடுத்து 2 மலையாள படங்களின் சாதனை வசூல்.. ஏக்கத்தில் தமிழ் சினிமா..!
- IndiaGlitz, [Monday,March 11 2024]
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில் மலையாள திரை உலகில் அடுத்தடுத்து இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் 100 கோடி மற்றும் 150 கோடி என வசூல் செய்திருப்பது தமிழ் சினிமா உலகினர்களுக்கு பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தெரிகிறது.
மலையாளத்தில் வெளியான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வெளியான நிலையில் இன்னும் 20 நாட்கள் கூட முழுதாக முடியாத நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதும், இதில் பெரும்பாலும் தமிழகத்தில் தான் அதிக வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அதே பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியான ’பிரேமலு’ என்ற திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போது 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து 100 கோடி 150 கோடி என வசூல் செய்திருப்பது இந்திய திரை உலகினர்களுக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 100 கோடி முதல் 500 கோடி வரை பட்ஜெட்டில் தயாரிக்கும் தமிழ் சினிமா மிகவும் ஏக்கத்தோடு மலையாள சினிமாவை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை நம்பாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மீண்டு வர வாய்ப்புள்ளது என திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.