லண்டனில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா… ஒமைக்ரான் பாதிப்பா?

லண்டனில் இருந்து நேற்று (3.12.2021) அதிகாலை சென்னை வந்த ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்து தற்போது பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் ஸ்பைக் புரதம் பல்வேறு முறைகளில் உருமாற்றம் அடைந்து மேலும் அதன் மரபணுவில் உருமாற்றம் ஏற்பட்டு புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வருகிறது.

முன்னதாக தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66, 46 வயதுடைய இரு நபருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய பலரிடம் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டு அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? எனும் சோதனை தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியிருக்கும் 8 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக லண்டனில் இருந்து சென்னை வருதவற்கு முன்பு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் இதையடுத்து 2 வாரத் தனிமைப்படுத்தலுக்குப் பின் தற்போது சென்னை வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.