'தளபதி 67' படத்தில் இணைந்த மேலும் 2 பிரபலங்கள்.. மொத்தம் 6 வில்லன்களா?

  • IndiaGlitz, [Tuesday,January 17 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தில் ஏற்கனவே ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத்,கௌதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தில் ஆறு வில்லன்ககளா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பது தெரிந்தது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தினம் தோறும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இயக்குனர் மிஷ்கின் ’தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விருது விழாவில் பேசிய மிஷ்கின் ’இப்பொழுதுதான் ’தளபதி 67’ படத்தில் நடித்துவிட்டு வருகிறேன். அவருடன் தீவிரமாக சண்டை போட்டேன். அவர் என்னுடைய முகத்தில் குத்தி ரத்தக்களறியாக்கிவிட்டார். 20 வருடங்களுக்கு முன் அவருடன் ’யூத்’ படத்தில் பணி புரிந்தேன், அதன் பிறகு இப்போது தான் அவருடன் பணிபுரிகிறேன். அப்போது இருந்ததை விட இப்போது மிகவும் இளமையாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டியும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ‘777 சார்லி’ உள்பட பல படங்களில் நடித்த கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ஆவார்.

இதனை அடுத்து அர்ஜூன், சஞ்சய்தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ரக்சித் ஷெட்டி மற்றும் மிஷ்கின் ஆகிய 6 பிரபலங்கள் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் த்ரிஷா நாயகி ஆக நடித்த வருகிறார் என்பதும் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.